நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது அரசியல் வருகை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசியலில் இணையத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், அதுகுறித்த இறுதி முடிவை மக்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் எடுப்பேன் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் அரசியலில் நுழைவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் வர வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளன. நான் அரசியலுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்களாகிய நீங்கள் முடிவு செய்து சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசியலுக்கு வருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். உங்கள் கருத்துகளைக் கேட்ட பிறகே எனது முடிவை அறிவிப்பேன். நீங்கள் வேண்டாம் என்று கூறினால் அரசியலுக்கு வரமாட்டேன்” என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் எந்த அளவுக்கு தனக்கு நெருக்கமானவரோ, அதே அளவுக்கு நடிகர் விஜய்யும் நெருக்கமானவர் என்றும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். எனினும், தனது அரசியல் வருகை குறித்த இறுதி முடிவை உடனடியாக அறிவிக்காமல், மக்களின் கருத்துக்காக காத்திருப்பதாக கூறி சஸ்பென்ஸை நீட்டித்துள்ளார்.
