புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் மீண்டும் ஒரு பரபரப்பான கிரைம் த்ரில்லர்!
பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமார் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வதந்தி Season 2 — The Mystery of Mani’ என்ற இணையத் தொடரின் (Web Series) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இத்தொடர் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அமேசான் பிரைம் (Amazon Prime Video) ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமாரின் முதல் சீரிஸ் அவதாரம்
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘வதந்தி’ முதல் பாகம் (S.J.சூர்யா நடிப்பில்) ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் சசிகுமார் ‘மூசா ராஸா’ என்ற காவல் துறை அதிகாரியாக (SI) முதன்முதலாக வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இக்கதைக்களத்தில், ஜல்லிக்கட்டு திருவிழாவின் பின்னணியில் நடக்கும் ஒரு மர்மமான வழக்கை விசாரிக்கும் நேர்மையான காவல் அதிகாரியின் மனப்போராட்டங்களும், தேடல்களுமே முதன்மைப் பொருளாகக் கொண்டு இயக்கம் கண்டுள்ளது.

பிரமாண்ட கூட்டணி & தயாரிப்பு
- இயக்கம்: முதல் பாகத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இதையும் இயக்கியுள்ளார்.
- தயாரிப்பு: ‘விக்ரம் வேதா’, ‘சுழல்’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி தங்களது ‘வால்வாட்சர் பிலிம்ஸ்’ (Wallwatcher Films) நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளனர்.
- நட்சத்திரப் பட்டாளம்: சசிகுமாருடன் இணைந்து அபர்ணா தாஸ், அனகா, விவேக் பிரசன்னா, யஷ்வந்த், ரேவதி சர்மா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில்
8 அத்தியாயங்கள் கொண்ட இந்தச் சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் தொடர், தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மொழிகளின் துணைத் தலைப்புகளுடனும் (Subtitles) உலகளவில் ஆகஸ்ட் 7 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு திரை உலகினரிடையே அதிகரித்துள்ளது.
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் அடுத்த சுயாதீனப் பாடல் ஆகஸ்டில் வெளியீடு!
