இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.


பல ஆண்டுகளாக நடந்த முயற்சி
எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகப்பெரிய இசை ஆளுமையின் வாழ்க்கையை திரையில் கொண்டு வருவது சாதாரணமான முயற்சி அல்ல. அவரது வாழ்க்கையை உண்மைத் தன்மையுடனும் உரிய மரியாதையுடனும் பதிவு செய்வதற்காக உரிமைகள், அனுமதிகள், இலக்கிய ஆதாரங்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்புகள் உள்ளிட்ட பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா
இந்த பயோபிக்கின் மையக் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இசை உலகில் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பொறுப்பு ராஷ்மிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணம் மட்டுமின்றி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள், போராட்டங்கள், மனவலிமை மற்றும் ஆன்மிகப் பயணம் ஆகியவற்றையும் திரைப்படம் பதிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைக்கிறார் அனிருத்
இந்த படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, இன்றைய தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் காலத்தால் அழியாத இசை மரபையும் இன்றைய தலைமுறையையும் இணைக்கும் வகையில் அவரது பங்களிப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவுதம் தின்னனூரி இயக்கம்
‘ஜெர்சி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கவுதம் தின்னனூரி இந்த பிரம்மாண்டமான பயோபிக்கை இயக்குகிறார். தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகியோர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.
பெரிய நட்சத்திர கூட்டணி
எம்.எஸ். சுப்புலட்சுமியின் சிறுவயது இசைப் பயணம் தொடங்கி, உலக அளவில் புகழ்பெற்ற இசைக் கலைஞராக அவர் உயர்ந்தது வரையிலான முக்கியமான கட்டங்களை திரைப்படம் பதிவு செய்யும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த கதாபாத்திரத்திற்காக சாய் பல்லவி, ருக்மிணி வசந்த், நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட நடிகைகளின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இறுதியில் ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
110-வது பிறந்தநாளில் அறிவிப்பு
எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் அறிவிப்பு நிகழ்வு நடைபெறுவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இந்திய பாரம்பரிய இசையின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒருவரான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு தற்போது சினிமா மூலம் புதிய தலைமுறையை சென்றடைய உள்ளது. ராஷ்மிகா மந்தனா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரத்தை எப்படி திரையில் பிரதிபலிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
வைரலாகும் சமந்தாவின் வளைகாப்பு போட்டோஸ்… ‘பாரம்பரியத்தில் ஒரு சக்தி இருக்கு’ என நெகிழ்ச்சி!
