நடிகர் நாகர்ஜுனா அக்கினேனியின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு தற்போது தற்காலிகமாக ‘கிங் 100’ என தலைப்பிடப்பட்டுள்ளது.


இந்தப் படத்தை அசோக் செல்வன் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரா.கார்த்திக் இயக்குகிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
1.20 நிமிட க்ளிம்ஸ் வீடியோ
சுமார் 1.20 நிமிடங்கள் ஓடும் இந்த க்ளிம்ஸ் வீடியோ, நாகர்ஜுனாவின் குரலுடன் தொடங்குகிறது. அதில் மனிதர்களிடையே காணப்படும் பணம் மற்றும் சமூக அந்தஸ்து சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் குறித்து அவர் பேசுகிறார்.
பணம் வைத்திருப்பவர்களை சமூகமே ‘கிங்’ என கொண்டாடுவதாகவும், அதே நேரத்தில் பணம் இல்லாதவர்களை தோல்வியடைந்தவர்கள் போல பார்க்கும் மனநிலை இருப்பதாகவும் அவரது குரல் பதிவு சுட்டிக்காட்டுகிறது.
வித்தியாசமான தோற்றத்தில் நாகர்ஜுனா
க்ளிம்ஸ் வீடியோவில் நாகர்ஜுனா பல்வேறு தோற்றங்களில் இடம்பெறுகிறார். குறிப்பாக, ஒரு காட்சியில் மிகவும் ஸ்டைலான தோற்றத்திலும், மற்றொரு காட்சியில் குழந்தையைத் தூக்கியபடி ஏழ்மையான தோற்றத்திலும் அவர் காட்சியளிக்கிறார்.
இந்த மாறுபட்ட தோற்றங்களும், வீடியோவில் இடம்பெறும் சமூக கருத்துகளும் ‘கிங் 100’ திரைப்படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு
நாகர்ஜுனாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை ராஜா மகாதேவன் மேற்கொள்கிறார். படத்தொகுப்புப் பணிகளை நவீன் நூலி கவனிக்கிறார்.
டிசம்பர் 24-ல் திரையரங்குகளில் வெளியாகிறது
நாகர்ஜுனாவின் 100-வது படமாக உருவாகி வருவதால் ‘கிங் 100’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது வெளியான க்ளிம்ஸ் வீடியோ அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், இப்படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
