மலையாள திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹிருதயம். பிரேமம் படத்தை போல மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஹிருதயம் திரைப்படம் பிரபலம் அடைந்தது. இப்படத்தில் மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். தர்ஷனா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். கேரளா, சென்னை இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ஹிட் அடித்தன. மேலும், அருண் மற்றும் நித்யா கதாபாத்திரங்களும் பெரிதளவில் பேசப்பட்டன.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹிருதயம் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்தது. இதன் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பி தியான் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். இந்த புதிய படமானது மோகன்லாலுக்கும் இயக்குனர் வினித்தின் தந்தை ஸ்ரீனிவாசனுக்கும் இடையே உள்ள நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது. இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். ஸ்ரீனிவாசன் கதாபாத்திரத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடிக்கிறார்.
இப்படத்திற்கு வருஷங்களுக்கு ஷேஷம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் நடிகர் நிவின் பாலி கலந்து கொண்டுள்ளார். நிவின் பாலியும், பிரணவ் மோகன்லாலும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தில் நிவின்பாலி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.