நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைத் தாய்மார்களுக்கு இலவசமாக பட்டுப்புடவைகள் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். தனது அறக்கட்டளை 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த அறப்பணியை அவர் தொடங்க உள்ளார்.


லாரன்ஸ் அறக்கட்டளையின் புதிய முயற்சி
ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்’ (The Pattu Saree Scheme) குறித்து அறிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாகத் தனது அறக்கட்டளை மூலம் குழந்தைகளின் கல்வி, இதய அறுவை சிகிச்சை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நற்பணிகளைச் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 5,000 பட்டுப்புடவைகள்
தேவையுள்ள மக்களுக்கு உதவி செய்யச் சென்றபோது, பெண் ஒருவர் தனக்கு அழகான பட்டுப்புடவை வேண்டும் என்று கடிதம் கொடுத்ததாக ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
அந்தக் கடிதத்தைப் படித்தபோது, கிராமப்புறங்களில் வாழும் பல பெண்களுக்கு தங்கள் வாழ்நாளில் பட்டுப்புடவை அணியும் வாய்ப்புகூடக் கிடைக்காமல் இருக்கலாம் என்று சிந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக 5,000 பட்டுப்புடவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அக்டோபர் 29-ம் தேதி திட்டம் தொடக்கம்
தனது பிறந்தநாளான அக்டோபர் 29-ம் தேதி, தான் வளர்ந்த ராயபுரத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
லாரன்ஸ் அறக்கட்டளையின் 20 ஆண்டுகால சேவையைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முயற்சி, கிராமப்புறப் பெண்களுக்கு உதவும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவும் ஆசியும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனுஷின் ‘ஓம்’ படத்தின் ‘வீழா வீரா’ பாடல் இன்று மாலை வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!
