இணைய உலகத்தில் எப்போது எந்த விஷயம் வைரலாகி விவாதாமாக மாறும் என்றே கணிக்க முடியாது. அந்த வகையில், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் (NRI) மருத்துவச் செலவுகள் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்களும், மறுபுறம் இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான பெங்களூருவில் ஓட்டுநர்களின் வியக்க வைக்கும் வருமானம் குறித்த விபரங்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. இவையிரண்டும் ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
அமெரிக்காவில் ஒரு பல்லின் விலை ரூ.2.37 லட்சமா? – அதிர்ச்சியில் உறைந்த NRI!
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியரான (NRI) நித்தின் மல்ஹோத்ரா என்பவர் பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் அவர், தன்னிடம் முறையான மருத்துவக் காப்பீடு (Health Insurance) இருந்தும், ஒரு பல்லை எடுப்பதற்காக (Tooth Extraction) டென்டிஸ்ட் தன்னிடம் $2,500 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.37 லட்சம்) கட்டணமாகக் கேட்டதாகக் கூறி அந்த பில்லைப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் இந்தச் செலவைக் கண்டு அதிர்ந்துபோன அவர், “இதே சிகிச்சைக்காக இந்தியாவில் வெறும் ரூ.15,000 முதல் ரூ.20,000 மட்டுமே செலவாகும். அமெரிக்காவில் விமானப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவில் பல் மருத்துவ சிகிச்சையை முடித்துவிட்டு, ஊர் சுற்றிவிட்டுத் திரும்பினால் கூட இங்கு ஒரு பல் மருத்துவக் கட்டணத்தை விடக் குறைவாகவே செலவாகும் போலிருக்கிறது” என நக்கல் கலந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். வெளிநாடுகளில் சம்பாதிக்கும் உயர் ஊதியத்திற்குப் பின்னால் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த மறைமுக மருத்துவச் செலவுகள் குறித்து தற்போது பலரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
பெங்களூரு ‘உபர் பிளாக்’ (Uber Black) ஓட்டுநரின் வார வருமானம்: வாயைப் பிளக்கும் நெட்டிசன்கள்!
மறுபுறம், இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாட்சியான பெங்களூருவில் சாதாரண உழைப்பும், அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் இணையத்தில் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் ‘உபர் பிளாக்’ (Uber Black) சொகுசு கார் ஓட்டுநராகப் பணிபுரியும் ஹம்தோர் டெப்பார்மா (Hamtor Debbarma) என்பவர் தனது ‘வழக்கமான ஒரு நாள்’ (Normal Day) குறித்த வ்லாக் (Vlog) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காலை நடைமுறை முதல், உடையலங்காரம், வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வது வரை தனது அன்றாடப் பணிகளை அந்த வீடியோவில் அவர் பகிர்ந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த வீடியோவின் இறுதியில் அவர் காட்டிய வாராந்திர வருமானத்தின் அளவுதான் நெட்டிசன்களைத் தலைசுற்ற வைத்துள்ளது. ஒரு வாரத்தில் அவர் ஈட்டிய தொகை ரூ.46,022 ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்து மாதக் சம்பளம் வாங்கும் பல இளைஞர்களை விட, இந்த ஓட்டுநரின் வார வருமானம் அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி பலரும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “உழைப்புக்கு எப்போதுமே மரியாதை உண்டு, எந்தத் தொழிலும் தாழ்வானதல்ல” என்பதை இந்த வீடியோ நிரூபிப்பதாகப் பலரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இணையத்தின் இன்றைய ஹாட் டாபிக்!
வெளிநாட்டின் ஆடம்பர வாழ்க்கையின் மறுபக்கமான விண்வெளியைத் தொடும் மருத்துவச் செலவுகளையும், உள்நாட்டில் சாதாரணத் தொழிலாளர்களின் கடின உழைப்புக்கான பலனையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். உலகமயமாக்கலின் இந்த இரண்டு வேறுபட்ட முகங்கள் தற்போது சமூக ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.
இந்திய விமானப்படையின் நாயகன் அபினந்தன் வர்தமான் தனியார் விமான நிறுவனத்தில் இணைந்தார்!
