இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய சில அம்சங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தம் ஒரு முடிவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


தீர்வை நோக்கி நகரும் பேச்சுவார்த்தை
ப்ளூம்பெர்க் நியூ எகனாமி ஃபோரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் வேறுபாடுகளைக் களையப் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
ஒப்பந்தம் தொடர்பான சில விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்பட வேண்டியுள்ளதால், பேச்சுவார்த்தையின் முழு விவரங்களையும் தற்போது பொதுவெளியில் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கு சாதகமான வர்த்தக நிபந்தனைகள் முக்கியம்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது, இரு நாடுகளுக்கு இடையிலான நிபந்தனைகள் மட்டுமின்றி, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிற போட்டி நாடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருட்கள் அமெரிக்கச் சந்தையில் போட்டியிடுவதற்கு ஏற்ற வரி விகிதங்களையும் வர்த்தக நிபந்தனைகளையும் பெறுவது இந்தியாவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
வரி விவகாரத்தில் நீடிக்கும் சவால்கள்
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் இறக்குமதி வரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதும், அந்நாட்டின் சந்தையை அணுகுவதற்கான நிபந்தனைகளை மாற்றியமைப்பதும் அதன் பொருளாதார அணுகுமுறையின் ஒரு பகுதியாக இருப்பதாக ஜெய்சங்கர் விளக்கியுள்ளார்.
இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சில முக்கிய விவகாரங்களில் இன்னும் தீர்வு காணப்பட வேண்டியிருப்பதால், ஒப்பந்தம் கையெழுத்தாகும் தேதி உறுதி செய்யப்படவில்லை.
இந்தியா – அமெரிக்க உறவில் மாற்றம் ஏற்படுமா?
வர்த்தக விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான அடிப்படை உத்திசார் கூட்டாண்மை தொடர்ந்து வலுவாக இருப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தகட்ட நகர்வுகள் கவனத்தைப் பெற்றுள்ளன.
