ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று (செப்டம்பர் 26) இந்திய வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் களமிறங்குகின்றனர். குறிப்பாக கபடியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.


கபடியில் தங்கத்துக்கான போட்டி
இந்திய பெண்கள் கபடி அணி இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஈரான் அணியை எதிர்கொள்கிறது. இதைத்தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு இந்திய ஆண்கள் அணி ஈரானை எதிர்த்து இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இரு போட்டிகளும் இந்திய ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
பேட்மிண்டன் போட்டிகள்
காலை 6 மணிக்கு லக்ஷ்யா சென், சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொள்கிறார். தொடர்ந்து உன்னதி ஹூடா, ஆயுஷ் ஷெட்டி உள்ளிட்ட இந்திய வீரர்களும் களமிறங்குகின்றனர்.
பிற்பகல் 1.30 மணிக்கு பி.வி.சிந்து, சீன தைபேயின் சியூ பின்-சியானை எதிர்கொள்கிறார். மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி–காயத்ரி கோபிசந்த் ஜோடியும் இன்று விளையாடுகிறது.
தடகளத்தில் முக்கிய போட்டிகள்
தடகளப் போட்டிகளில் இன்று பல இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். காலை ஆண்களுக்கான மராத்தான் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் சவான் பர்வால் மற்றும் கார்த்திக் கர்கேரா பங்கேற்கின்றனர்.
மாலை 4.04 மணிக்கு ஜோதி யர்ராஜி மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் களமிறங்குகிறார். மாலை 4.30 மணிக்கு தஜிந்தர்பால் சிங் டூர் மற்றும் கரண்வீர் சிங் ஆண்களுக்கான ஷாட்புட் இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
மேலும், பிரவீன் சித்ரவேல் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியிலும், பாருல் சவுத்ரி மகளிர் 1500 மீட்டர் இறுதிப் போட்டியிலும் பங்கேற்கின்றனர்.
ஸ்குவாஷ் போட்டிகள்
இந்தியாவுக்கு ஸ்குவாஷிலும் முக்கியமான போட்டிகள் உள்ளன. காலை 10.35 மணிக்கு அனஹத் சிங், ஜப்பானின் சடோமி வதனாபேவை எதிர்த்து மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் விளையாடுகிறார்.
காலை 11.15 மணிக்கு அபய் சிங், பாகிஸ்தானின் முஹம்மது இர்ஃபானை எதிர்த்து ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் களமிறங்குகிறார்.
ஹாக்கி, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகள்
பிற்பகல் 1.30 மணிக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது. குத்துச்சண்டையிலும் பல இந்திய வீரர்கள் தங்களது அடுத்த சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
மேலும், வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், வாள் சண்டை, குதிரையேற்றம், கேனோ ஸ்பிரிண்ட், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளிலும் இந்திய வீரர்கள் இன்று களமிறங்குகின்றனர்.
இதனால் ஆசிய விளையாட்டு போட்டியின் 8-வது நாளான இன்று, இந்தியாவுக்கு பல பதக்க வாய்ப்புகள் உள்ள முக்கியமான நாளாக அமைந்துள்ளது.
