கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரும் ஆண்டுகளில் சர்வதேசப் போட்டிகள் மூலம் மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. 2028 முதல் 2035 வரையிலான காலகட்டத்தில் டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை என பல முக்கிய ஐசிசி தொடர்கள் நடைபெற உள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), 2032 முதல் 2035 வரையிலான சர்வதேசப் போட்டிகளுக்கான உத்தேச அட்டவணையைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து Cricbuzz வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2032ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடரை அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கான காலஅவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2032 டி20 உலகக்கோப்பை எங்கு நடைபெறும்?
2032ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
ஒருவேளை தென்னாப்பிரிக்காவுக்கு இந்தத் தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைத்தால், 2028, 2030 மற்றும் 2032 என தொடர்ந்து மூன்று டி20 உலகக்கோப்பை தொடர்களும் SENA நாடுகளின் கிரிக்கெட் சூழலில் நடைபெறும் வாய்ப்பு உருவாகும்.
SENA நாடுகள் என்பது தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் குறிக்கிறது. இந்த நாடுகளின் ஆடுகளங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சு, பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆகியவற்றுக்குச் சாதகமாக இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்களுக்கும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இடையிலான போட்டி ரசிகர்களுக்கு கூடுதல் விறுவிறுப்பை அளிக்கும்.
2032 முதல் 2035 வரை நடைபெறவுள்ள முக்கிய ஐசிசி தொடர்கள்!
ஐசிசியின் உத்தேச அட்டவணையின்படி, 2032 முதல் 2035 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஆறு முக்கிய சர்வதேசத் தொடர்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 2032: ஆண்கள் டி20 உலகக்கோப்பை – அக்டோபர் / நவம்பர்.
- 2033: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – ஜூன்.
- 2033: சாம்பியன்ஸ் டிராபி – அக்டோபர்.
- 2034: ஆண்கள் டி20 உலகக்கோப்பை – ஜூலை.
- 2035: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.
- 2035: ஒருநாள் உலகக்கோப்பை.
இன்னும் வெளியாகாத அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தத் தொடர்களுக்கான போட்டி நடைபெறும் நாடுகள் மற்றும் மைதானங்கள் குறித்த விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. குறிப்பாக 2032 டி20 உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா நடத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு முக்கியமான சர்வதேசத் தொடர்கள் வரிசையாக இடம்பெற உள்ளதால், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உலக சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி! 15 வயதில் டி20 கிரிக்கெட்டின் இளம் கேப்டன் என்ற பெருமை!
