Homeசெய்திகள்விளையாட்டு“பெண்கள் விளையாட்டில் சாதிக்க குடும்பத்தினரின் ஆதரவு அவசியம்!” – பி.டி.உஷா முக்கிய தகவல்

“பெண்கள் விளையாட்டில் சாதிக்க குடும்பத்தினரின் ஆதரவு அவசியம்!” – பி.டி.உஷா முக்கிய தகவல்

-

- Advertisement -

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி–நகோயா பகுதிகளில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சி, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியின் தயாரிப்பு, பெண்கள் விளையாட்டில் அதிகளவில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

we-r-hiring

501 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

2026 ஐச்சி–நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் 501 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இதில் 36 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என பி.டி.உஷா தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் சிறப்பாகப் பயிற்சி பெற்று தயாராகியுள்ளதாகக் கூறிய அவர், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதக்கங்களை இலக்காக நிர்ணயிப்பது வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்தார். பயிற்சி மற்றும் போட்டிக்கான தயாரிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே முக்கியம் என அவர் கூறினார்.

இந்திய பாரா விளையாட்டில் முன்னேற்றம்

இந்தியாவின் பாரா விளையாட்டு வீரர்களின் சர்வதேச சாதனைகள் குறித்தும் பி.டி.உஷா பேசினார். 2012 லண்டன் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு பதக்கம் வென்ற நிலையில், 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் 29 பதக்கங்கள் வென்றதாக அவர் குறிப்பிட்டார்.

ஆரம்ப நிலையிலிருந்தே வீரர்களுக்கு தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், போட்டி அனுபவத்தைப் பெறவும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய விளையாட்டுக் கொள்கை குறித்து கருத்து

2025-ல் கொண்டுவரப்பட்ட தேசிய விளையாட்டுக் கொள்கை குறித்து பேசிய பி.டி.உஷா, ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் மூலம் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, உயர்நிலைப் போட்டிகளுக்கு தேவையான உலகத் தரமான பயிற்சியை வழங்க வேண்டும் என்றார்.

மேலும், உடற்பயிற்சி மற்றும் உடல் சுறுசுறுப்பை ஊக்குவிக்கும் ‘ஃபிட் இந்தியா’ திட்டமும் முக்கியமானது என்றும், 2030 காமன்வெல்த் போட்டிகள் மற்றும் 2036 ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவது தொடர்பான இந்தியாவின் இலக்குகளுக்குத் தேவையான கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

கிரிக்கெட்டைத் தாண்டி ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல்

கிரிக்கெட்டைத் தவிர சர்வதேச அளவில் இந்தியாவுக்கு வலிமையான விளையாட்டுகளாக ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல் ஆகியவற்றை பி.டி.உஷா குறிப்பிட்டார்.

தனிநபர் வீரர்களின் வெற்றிகளைத் தாண்டி, பல்வேறு விளையாட்டுகளில் வலுவான வீரர்கள் பட்டாளத்தை உருவாக்குவதே முக்கிய சவால் என்றும் அவர் தெரிவித்தார்.

“விளையாட்டை கல்விக்குத் தடையாக பார்க்கக் கூடாது”

பெற்றோரும் பள்ளிகளும் விளையாட்டை கல்விக்கு தடையாகக் கருதக்கூடாது என்று பி.டி.உஷா கூறினார்.

விளையாட்டு மூலம் ஒழுக்கம், தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமை ஆகியவை வளர்வதாகவும், திறமைமிக்க வீரர்களுக்கு விளையாட்டே சிறந்த தொழில்வாய்ப்பாகவும் அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு குடும்ப ஆதரவு அவசியம்

விளையாட்டில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து பேசிய பி.டி.உஷா, தனது காலத்தில் தேசிய அளவில் விளையாட்டு நட்சத்திரங்களாக இருந்த பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகக் கூறினார்.

1986 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தான் நான்கு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றது பல இளம் பெண்களை விளையாட்டுத் துறைக்கு வர ஊக்கமளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தலைமுறையில் கர்ணம் மல்லேஸ்வரி, மேரி கோம், சாய்னா நேவால், பி.வி.சிந்து, சானியா மிர்சா, லோவ்லினா, மீராபாய் சானு, வினேஷ் போகத், மனு பாகர் உள்ளிட்ட பல பெண்கள் சாதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

பெண்கள் விளையாட்டில் சாதிக்க பாதுகாப்பான வசதிகள், சிறந்த பயிற்சியாளர்கள், போதிய போட்டி வாய்ப்புகள் மட்டுமின்றி குடும்பத்தின் ஆதரவும் அவசியம் என்று பி.டி.உஷா வலியுறுத்தினார். மேலும், பெண் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்றார்.

2036 ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்த 10 ஆண்டுகளில் தயாராக வேண்டும்

2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான இலக்கு குறித்து பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் மைதானங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மட்டுமின்றி பயிற்சி, விளையாட்டு அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் வீரர்களுக்கான ஆதரவு ஆகியவற்றையும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

2030 காமன்வெல்த் போட்டிகள் இதற்கான முன்னோட்டமாக அமையும் என்றும் பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டி: ஜப்பானை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

MUST READ