துலீப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையே தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த கிழக்கு மண்டலம் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இஷான் கிஷனின் அபார சதத்தின் உதவியோடு 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது.


சேப்பாக்கத்தை அதிரவைத்த ‘வைபவ் சூர்யவன்ஷி’ வைப்!
இந்த போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் 15 வயதே ஆன இளம் வீாரர் வைபவ் சூர்யவன்ஷி. வழக்கமாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் வருகை குறைவாகவே இருக்கும். ஆனால், வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைப் பார்க்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.
ரசிகர்கள் கூட்டம்: காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குவதற்குள் இலவசமாக திறக்கப்பட்ட 3 ஸ்டாண்டுகளும் நிரம்பின. வெளியேயும் மக்கள் வரிசையில் காத்திருந்ததால், மேலும் 3 ஸ்டாண்டுகள் பொதுமக்களுக்காகத் திறந்து விடப்பட்டன.
மைதான மாற்றம்: இந்த இறுதிப் போட்டி முதலில் பெங்களூருவில் உள்ள ‘செண்டர் ஆஃப் எக்செலன்ஸ்’ மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் சில காரணங்களால் போட்டி சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.
சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாகவே ஆட்டத்தைத் தொடங்கினார்:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை சந்தித்த 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மா, சூர்யவன்ஷியின் ஷாட்களைத் தடுக்கப் பல பீல்டர்களை அமைத்தார்.
நிதீஷ் மற்றும் சி.வி.மிலிந்த் ஆகியோரின் ஷார்ட் பிட்ச் பவுன்சர்களைத் தாண்டி, 24 பந்துகளில் 34 ரன்கள் என தனது ரன் குவியல் வேகத்தை உயர்த்தினார்.
எதிர்பாராத விக்கெட் சரிவு
தீப்பொறியென ஆடிக்கொண்டிருந்த சூர்யவன்ஷி 37 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹைதராபாத் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சி.வி.மிலிந்தின் நெஞ்சு உயர ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட்டானதும் மைதானமே அமைதியானதுடன், ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
அடுத்த சச்சின் உருவாகிறாரா?
ஸ்ரீகாந்த், சேவாக், சச்சின், தோனி, யுவராஜ், கோலி போன்ற ஜாம்பவான்கள் ஈர்த்த ரசிகர் பட்டாளத்தை, தனது 15 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி ஈர்த்திருப்பது மிகப்பெரிய விஷயமாய் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், ரசிகர்களின் இந்த அதிகப்படியான எதிர்பார்ப்பு பேட்டிங்கின் போது கூடுதல் அழுத்தத்தை தரக்கூடும். இந்த அழுத்தத்தைச் சச்சின் டெண்டுல்கரைப் போல சூர்யவன்ஷி வரும் காலங்களில் சிறப்பாகக் கையாண்டால், இந்தியாவிற்கு அடுத்த ‘சச்சின் டெண்டுல்கர்’ கிடைத்துவிட்டார் என்பதில் சந்தேகமில்லை!
