தமிழகத்தில் நடைபெற்று வரும் புதிய ஆட்சி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் “மாற்றம்” என்ற பெயரில் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய் மீதான தனது கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்துள்ளாா்.
”மாற்றம் என்பது ஏமாற்றம்”
”திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், கடந்த கால ஆட்சிகளைப் போன்றே செயல்படுகிறது. வேட்டியை அணிந்திருந்த முதலமைச்சருக்குப் பதிலாக, இன்று கோட் சூட் அணிந்த முதலமைச்சர் வந்துள்ளார். இதனைத் தவிர, மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு ஆக்கப்பூர்வமான மாற்றமும் இந்த ஆட்சியில் நிகழவில்லை” என்று இடும்பாவனம் கார்த்திக் விமர்சித்தார். மேலும், தேர்தல் காலங்களில் மற்ற கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன எனக் குற்றம் சாட்டிய இதே தவெக, காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

அடையாள அரசியலும் சமூக நீதியும்
சமூக நீதி மற்றும் சாதி ஒழிப்பு விவகாரங்களில் இந்த அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில்: “மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரம், சேலம் கங்கவள்ளி அருகே அம்பேத்கர் சிலை திறப்பு எதிர்ப்பு எனப் பல இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் ஒடுக்கப்பட்டே உள்ளனர். கடந்த கால திமுக ஆட்சியில் என்ன நிலையோ, அதே நிலைதான் தற்போதும் தொடர்கிறது. சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டும், இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இவையெல்லாம் வெறும் அடையாள அரசியலே தவிர, சமூக நீதி அல்ல” என்றார்.
தனிநபர் துதிபாடும் போக்கு
முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புவதற்கு ஒரு கூட்டம் சமூக வலைதளங்களில் உள்ளது. தங்களுக்குப் பிடித்தமான நடிகர் என்பதற்காக, பகுத்தறிவுக்குப் புறம்பான தகவல்களைக் கூட உண்மை என நம்பும் போக்கு ஆபத்தானது. திரைப் பிரபலம் குறித்த சர்ச்சைகளில் தனிநபர்களைக் கைது செய்யும் அதே அரசு, சமூகப் பிரச்சனைகளில் போதிய கவனம் செலுத்துவதில்லை” என்று கடுமையாகச் சாடினார்.
நிதியறிக்கை குறித்த அதிருப்தி
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், பொருளாதார முன்னேற்றத்திற்கான எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்றும், இது ஒரு பெருத்த ஏமாற்றம் என்றும் அவர் தெரிவித்தார். தற்சார்பு பொருளாதாரம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் மேம்படுத்துவதில் இந்த அரசு பின்தங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். தன்னுடைய கொள்கை, கோட்பாடுகளை விடவும் அதிகாரமும் அகம்பாவமுமே இந்த ஆட்சியின் அடையாளமாக மாறிவருவதாகக் கூறி, இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்துள்ளாா்.
