மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். விழா ஏற்பாடுகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


முதல்வர் வழிகாட்டுதலின்படி ஏற்பாடுகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ், விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பே ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
வீரவசந்தராயர் மண்டபப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியதாகவும், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
9,500 பேருக்கு மட்டுமே அனுமதி
குடமுழுக்கு விழாவின்போது கோயிலின் மேல்தளத்தில் சுமார் 9,500 பேருக்கு மேல் அமர வைக்க முடியாது என்பதால், அதற்கேற்ப அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு 2,000 அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், கோயிலுக்கு ரூ.25 கோடி வரை உபயம் வழங்கிய உபயதாரர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“யாரையும் புறக்கணிக்கவில்லை”
அனுமதிச் சீட்டு வழங்குவதில் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என யாரையும் புறக்கணிக்கவில்லை என்றும், அனைத்து துறையினருக்கும் அனுமதி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார்.
பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் அடங்கிய பைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 2.5 லட்சம் பேருக்கு இந்தப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், குடமுழுக்கு விழாவின்போது ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். காலை 10 மணிக்கு பொது தரிசனம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு காலை 8.30 மணிக்கே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மொபைல் போன்களுக்கு கட்டுப்பாடு
கோயிலுக்குள் மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். பக்தர்கள் கோயிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மொபைல் போன்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்க கோயில்களை கட்டாயப்படுத்தவில்லை என்றும், கோயில்களின் நிதிநிலையைப் பொறுத்து கட்டணம் வசூலிப்பது குறித்து நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
குடமுழுக்கை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள்
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 6,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், சிறப்பு பேருந்துகள், மருத்துவ முகாம்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
“மின்வெட்டே இல்லைன்னா, எதற்காக வெளிச்சந்தையில் வாங்கணும்?” – எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கேள்வி!
