துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரை நோக்கி சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில், துணை விமானியின் தாக்குதல் முயற்சியை எதிர்கொண்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் புறப்பட்டது. இதில் சுமார் 180 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, காக்பிட் பகுதியில் விமானி ஸ்மித் மச்சாருக்கும் துணை விமானிக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
அப்போது துணை விமானி, ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கியதாகவும், தொடர்ந்து விமானத்தை கட்டுப்பாட்டை இழக்கச் செய்து தரையில் மோதி விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஸ்மித் மச்சார் காயமடைந்தார்.
இருப்பினும், காயமடைந்த நிலையிலும் ஸ்மித் மச்சார் துணை விமானியை எதிர்த்து போராடியதுடன், விமானத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் தனது வசப்படுத்தினார். பின்னர் விமானத்தை சவுதி அரேபியா நோக்கி திருப்பி, தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.
இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும், ஸ்மித் மச்சாரின் துணிச்சலுக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர். சம்பவத்தின்போது அவர் காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பாராட்டு
இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். “கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ. காயமடைந்த சூழ்நிலையிலும் பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது துணிச்சலையும் மன உறுதியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்” என்று பிரதமர் மோடி சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்மித் மச்சாரின் செயல்பாடு நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், மிகப்பெரிய துயரத்தைத் தவிர்க்கவும் உதவியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது வீரச் செயலை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்வதாகவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
ட்ரம்பும் புகழாரம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் செயல்பாட்டை பாராட்டியுள்ளார்.
துணை விமானி கத்தியால் தாக்கியதால் ஸ்மித் மச்சார் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோதிலும், அந்த சூழ்நிலையில் சமயோசிதமாக செயல்பட்டதாகவும், எனவே அவரை ஒரு ஹீரோ என்றே கூறலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சல்
விமானம் நடுவானில் இருந்தபோது ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஸ்மித் மச்சாரின் உடனடி நடவடிக்கை காரணமாக விமானம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. காயமடைந்த நிலையிலும் அவர் எடுத்த நடவடிக்கை காரணமாக விமானத்தில் இருந்த 180 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்மித் மச்சார் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும், விமானப் போக்குவரத்துத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்துக்குப் பிறகு அவரது துணிச்சல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
