Homeசெய்திகள்உலகம்ஃப்ளைதுபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயாரான இஸ்ரேல்? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஃப்ளைதுபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயாரான இஸ்ரேல்? வெளியான அதிர்ச்சி தகவல்!

-

- Advertisement -

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் FZ1073 பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விமானம் இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து சென்றிருந்தால், அதை சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேல் தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில், விமானியின் மீது துணை விமானி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விமானம் திடீரென உயரத்தை இழந்ததுடன், விமானத்தின் கட்டுப்பாட்டிலும் கடுமையான குழப்பம் ஏற்பட்டது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் தலையிட்டு துணை விமானியை கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் அவசரமாக சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 174 பேரில் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாற்று விமானம் மூலம் பயணிகள் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இஸ்ரேல் போர் விமானங்கள் தயார்

சிபிஎஸ் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, விமானம் கடுமையாக உயரத்தை இழந்தபோது இஸ்ரேல் அதிகாரிகள் விமானத்தின் காக்பிட்டுடன் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். பதில் கிடைக்காததால், கடத்தல் அல்லது பயங்கரவாத தாக்குதல் போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் அவசர நடைமுறை செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டதுடன், இஸ்ரேலிய வான்வெளியும் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் தொடர்ந்து இஸ்ரேலை நோக்கி வந்திருந்தால், போர் விமானங்கள் அதனை நெருங்கி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி நோக்கி திரும்பியதால் தவிர்க்கப்பட்ட விபரீதம்

ஃப்ளைதுபாய் விமானம் இஸ்ரேலை நோக்கி வராமல் சவுதி அரேபியாவை நோக்கி திரும்பி அவசரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் திரும்ப அழைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் தொடர்ந்து டெல் அவிவ் நோக்கி வந்திருந்தால், அதனை சுட்டு வீழ்த்தும் முடிவு வரை நிலைமை சென்றிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு வரும் வெளிநாட்டு விமானங்களின் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டு விமான நிறுவனங்களில் பணியாற்றும் விமானிகளின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு பின்னணி குறித்து கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது நிலைதடுமாறிய அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா – வைரல் வீடியோ

MUST READ