அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் முன்னிலை பெற்று வருகிறார். இதன் மூலம் அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் முக்கியமான வரலாற்றுச் சாதனையைப் படைக்கும் நிலை உருவாகியுள்ளது.


அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற மேயர் தேர்தலில், தற்போதைய மேயர் கரேன் பாஸ் மற்றும் நித்யா ராமன் இடையே கடும் போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் கரேன் பாஸ் முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த வாக்குகள் எண்ணப்பட்டபோது நித்யா ராமன் முன்னிலை பெற்றார்.
தற்போதைய நிலவரப்படி நித்யா ராமன் 51.1 சதவீத வாக்குகளையும், கரேன் பாஸ் 48.33 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து நித்யா ராமன் வெற்றி பெறுவார் எனத் தேர்தல் கணிப்பாளர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கேரளாவில் பிறந்தவர்
45 வயதான நித்யா ராமன் கேரளாவில் பிறந்தவர். தனது 6 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகமான எம்.ஐ.டி.யில் நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு சென்னையில் ‘டிரான்ஸ்பரன்ட் சென்னை’ என்ற அமைப்பை நிறுவி, நகர்ப்புற வசதிகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார்.
பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடற்ற மக்களுக்கான நலப்பணிகளிலும் ஈடுபட்டார்.
ஏற்கனவே படைத்த சாதனை
கடந்த 2020-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நித்யா ராமன், அந்த நகர கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய வம்சாவளி பெண் என்ற பெருமையைப் பெற்றார். 2024-ம் ஆண்டிலும் மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
தற்போது மேயர் தேர்தலிலும் முன்னிலை பெற்றுள்ளதால், அவரது வெற்றி உறுதியானால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் ஆசிய அமெரிக்க மேயராக வரலாறு படைப்பார்.
2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியில் நித்யா ராமனின் தலைமை முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முதல் கருப்பின சபாநாயகர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ்! யார் இவர்?
