சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் வண்ணமயமான அலங்காரங்கள், மின்விளக்குகள் மற்றும் பண்டிகைக் காலக் கடைகளால் வீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.


வண்ணமயமாக மாறிய லிட்டில் இந்தியா
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளியை வரவேற்கும் வகையில் கண்கவர் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. செரங்கூன் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான அலங்காரங்கள் பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து வருகின்றன.
கடைகளில் பாரம்பரிய ஆடைகள், நகைகள், அலங்காரப் பொருட்கள், விளக்குகள், கோலமிடுவதற்கான பொருட்கள், சுவாமி சிலைகள், மண் அகல் விளக்குகள் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சூடுபிடிக்கும் தீபாவளி விற்பனை
தீபாவளி பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக இந்திய வம்சாவளியினர் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் லிட்டில் இந்தியா பகுதிக்கு வருகை தருகின்றனர். பாரம்பரிய ஆடைகள் மற்றும் பண்டிகைப் பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே தீபாவளி விற்பனைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பண்டிகை நெருங்குவதால் வாடிக்கையாளர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வு
சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்து தீபாவளியைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு பண்டிகைப் பொருட்களும் லிட்டில் இந்தியா பகுதியில் கிடைப்பதால், சொந்த நாட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக அங்குள்ள இந்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பாலிவுட் பாடல்கள், பாரம்பரிய இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் பண்டிகை உற்சாகத்தை அதிகரித்து வருகின்றன.
நவம்பர் 8-ம் தேதி தீபாவளி
இந்த ஆண்டு சிங்கப்பூரில் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி லிட்டில் இந்தியா பகுதியில் அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள பண்டிகைக் கொண்டாட்டங்கள் நவம்பர் மாத இறுதி வரையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகின்றன.
மின்விளக்கு அலங்காரங்கள், சிறப்பு சந்தைகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளால் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதி தற்போது தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது.
