துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ‘ஃப்ளை துபாய்’ விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது.


செப்டம்பர் 30-ம் தேதி துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல் அவிவ் நோக்கி FZ1073 என்ற விமானம் புறப்பட்டது. போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் சுமார் 180 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது காக்பிட் பகுதியில் விமானி மற்றும் துணை விமானி இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து விமானம் தனது திட்டமிட்ட பாதையில் செல்ல முடியாமல் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் இருந்த பணியாளர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக ‘ஃப்ளை துபாய்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னர் விமானம் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் விமானி மற்றும் துணை விமானி காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் காக்பிட் பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் ஹமத் சைஃப் அல் ஷம்சி உத்தரவிட்டுள்ளார். சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த சம்பவத்துக்கு ஏதேனும் பயங்கரவாத தொடர்பு உள்ளதா, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா, அதன் பின்னணி மற்றும் நோக்கம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவு செய்யப்பட்டு அதன் தேசியக் கொடியை கொண்டிருப்பதால், விமானத்துக்குள் நடந்த குற்றங்கள் வெளிநாட்டு வான்வெளியில் நடைபெற்றிருந்தாலும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் UAE சட்டத்தின் கீழ் விசாரிக்க அதிகாரம் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும், விசாரணை முடியும் வரை அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். விசாரணை முடிவடைந்த பின்னர் சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 41 பேர் கொல்லப்பட்டதாக தகவல்! ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம்
