ரெட்ரோ பட வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சூர்யாவின் 44வது படமாக உருவாகியிருந்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். வில்லனாக ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்தார். இது தவிர கருணாகரன், ஜெயராம், பிரகாஷ்ராஜ், விது மற்றும் பலர் நடித்திருந்தனர். சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருந்தார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். காதல் கலந்த ஆக்சன் கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. சூர்யா, பூஜா ஹெக்டேவின் நடிப்பு பாராட்டப்படுகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ஷாட் காட்சிகளும், கனிமா பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. எனவே சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினாலும் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதே சமயம் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்திற்கு கிடைத்த வெற்றியை சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.