திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியுள்ளார். காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. திமுகவை விடக்கூடாது என்று சோனியா, ராகுல்காந்தி உறுதியாக உள்ளனர். அதேபோல், காங்கிசை விடக்கூடாது என்று திமுக தலைமையும் உறுதியாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எந்த அளவுக்கு வேலை பார்ப்பார்கள் என்கிற கேள்வி எழுகிறது? மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் பேசியது, காங்கிரஸ் தவெக உடன் கூட்டணிக்கு செல்லப்போகிறது. இது ராகுல்காந்தியின் ஆசிர்வாதத்தோடு தான் நடக்கிறது என்று சொல்வது, அதற்கு ராகுல்காந்தி அமைதி காத்தது.
இவை எல்லாம் திமுக தொண்டர்கள் மத்தியில் காங்கிரசுக்கு எதிராக பெரிய எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது. அது தேர்தலின்போது மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும். கே.சி.வேணுகோபல் உடனான பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் தருவதாக செய்தி வருகிறது. அப்படி கூடுதல் இடங்களை வழங்கினால், கட்சியினருக்கு எதிர்வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றும். இந்த இரண்டு காரணங்களையும் திமுக தலைமை எப்படி கையாள போகிறது என்று பார்க்க வேண்டும்.

கூட்டணியில் எல்லாம் சுமூகமாக போகட்டும். நமக்கு அதிமுக – பாஜக தான் எதிரி என்று அவர்களை குறிவைத்தால் அது கட்டாயம் கூட்டணிக்கு பலம் சேர்க்காது. விசிக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி போலவோ, காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு எந்த வகையிலும் உதவப் போவதும் இல்லை. உழைக்கப் போவதும் இல்லை. உழைக்க அவர்களிடம் ஆட்களும் இல்லை. இப்படியான சூழலில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கொடுப்பது, மற்ற கட்சிகளை வெறுப்பு ஏற்றுவதுடன் எதிர்காலத்தில் திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்கிற கேள்வியை கூட கூட்டணி கட்சிகளிடத்தில் ஏற்படுத்தலாம்.
நெருக்கடியான நேரத்தில் கூட எங்களுக்கான ஆட்சியில் பங்கு என்று கேட்பதன் அர்த்தம் என்ன? அந்த அளவுக்கு அவர்களிடம் பலம் உள்ளதா? சத்தியமூர்த்தி பவன் என்ன அதிகார மையத்தின் கோட்டையா? எப்படி அணுகுகிறார்கள் என்பது புரியவில்லை. இந்த சிக்கல் தேர்தலில் எதிர்மறையாக எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.

முதலமைச்சர் – கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தையின்போது கொடுக்கும் இடங்களை ஏற்றுக்கொண்டு வருவதாக இருந்தால் வாங்க… இல்லாவிட்டால் போங்க என்று சொல்லும் மனநிலையில் மு.க.ஸ்டாலின் இல்லை. அவர் அதிமுக – பாஜக அணியை வீழ்த்த வேண்டும் என்கிற இலக்கை வைத்துள்ளார். அதனால் கூட்டணியில் வேறு எந்த விதமான குழப்பமும் வேண்டாம் என்றுதான் அவருடைய அணுகுமுறை இருக்கும். ஆனால் திமுகவின் வெற்றிக்காக பாடுபட்ட மற்ற கட்சிகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, இவர்கள் மீது அக்கறை செலுத்துவது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாடு என்பது ஒரு விட்டுத்தராத மாநிலம். அதற்கு போர் வாளாக இருப்பது திமுக, விசிக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக்கட்சி. ஆனால் காங்கிரஸ்காரர்களை மட்டும் விட்டுவிட்டு இவர்கள் எல்லோரையும் நீங்கள் மட்டம் தட்டுகிறீர்கள். மமகவுக்கு 3 தொகுதிகள் கொடுக்கக்கூட நீங்கள் தயாராக இல்லை. அப்போது ஐதராபாத்தில் இருந்து ஓவைசி வந்து இங்கே உட்காருவார். திமுக அவர்களை புறக்கணிக்கும்போது அந்த சமூகம் எதிராக வேலை செய்யாதா? விசிகவை புறக்கணிக்கும்போது, அவர்களுக்கும் எதிர்சிந்தனை ஏற்பட்டு விஜயிடம் போய் நிற்பார்கள்.

திமுகவை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி இல்லாவிட்டால், கூட்டணி பலவீனப்பட்டு போய்விட்டதாக மக்களிடம் எண்ணம் ஏற்படும் என்று நினைக்கிறது. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் கூட்டணிக்கு நாங்கள் தான் முதுகெலும்பு என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார்கள். சமூக பிரதிநிதித்துவம் என்பது தான் சமூகநீதியின் அடிப்படையாகும். அந்த இடத்தில் எல்லோரையும் புறந்தள்ளிவிட்டு, காங்கிரஸ்காரர்களை ஊக்குவிப்பது என்பது என்ன விதமானது? அந்த பலவீனம் தொடர்ந்து நீடிக்கிறது.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து ஒருபோதும் வெளியேறாது. அதேவேளையில் காங்கிரஸ் இல்லாமலேயே திமுக கூட்டணியால் வெல்ல முடியும். அதற்கு காரணம் திமுக செயல்படுத்திய நலத்திட்டங்கள் ஆகும். காங்கிரசால் மக்களுக்கு எதாவது கிடைத்தது என்று சொல்ல முடியுமா? அப்படி எதுவும் கிடையாது. காங்கிரஸ் என்பது விக்கிரமாதித்தன் கதையில் வருகிற வேதாளம். அது எப்போதும் திமுக முதுகில் ஏறிக்கொண்டு கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். வேதாளத்திற்கு தான் முக்கியத்துவம். மற்றவர்கள் எல்லாம் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


