இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது” என்ற செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வதந்திகள் பரவின. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.

வதந்தி கிளம்பியது எப்படி?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் (ஈரான் – இஸ்ரேல் மோதல்) காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இதற்கிடையே, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “கொரோனா காலத்தைப் போன்ற தயார் நிலையில் (COVID-like preparedness) நாம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்ட சிலர், மீண்டும் 2020-ஆம் ஆண்டைப் போல லாக்டவுன் வரப்போகிறது என்று சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினர். மேலும், புதின் – மோடி சந்திப்பில் எரிசக்தி பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதையும் இதனுடன் இணைத்து பீதியை உருவாக்கினர்.
மத்திய அரசின் அதிரடி விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர், “இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை,” எனத் திட்டவட்டமாகத் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பேச்சிற்கே இடமில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. ஊரடங்கு குறித்த தகவல்கள் பொறுப்பற்ற முறையில் பரப்பப்படுகின்றன என்று ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
உண்மை என்ன?
தற்போது நிலவும் சூழல் ஒரு சுகாதார நெருக்கடி அல்ல, மாறாக ஒரு புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல். அரசு குறிப்பிட்ட “தயார் நிலை” என்பது பொருளாதார ரீதியாகவும், எரிசக்தி விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்துவதையும் குறிக்கிறதே தவிர, மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதை அல்ல.
அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், தேவையற்ற பீதியை தவிர்க்குமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
