அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அனைத்து விதிகளும் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக லெபனான் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வலியுறுத்தியுள்ளார்.

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படியிருந்தும், துரதிர்ஷ்டவசமாக சியோனிச அமைப்பான இஸ்ரேல், லெபனான் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த போரை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால், அமெரிக்கா தனது பொறுப்பை உணர்ந்து, லெபனான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலை வற்புறுத்த வேண்டும்.
மேலும், லெபனானில் தற்போது இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து அதன் படைகளை உடனடியாகத் திரும்பப் பெற அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏனெனில், அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் விதியே இஸ்ரேலியப் படைகள் வெளியேற வேண்டும் என்பதுதான்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
