ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் மேலும் 42 உல்லாச விடுதிகளுக்கு (Resorts) சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி:
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாகப் பல ரிசார்ட்டுகள் கட்டப்பட்டுச் செயல்படுவதாகவும், இதனால் அங்குள்ள வனவிலங்குகளின் வாழ்வாதாரமும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் கூறி ‘ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின்’ நிறுவனர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பெரும்பாலான சட்டவிரோத ரிசார்ட்டுகள் மீது இன்னும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் அறிக்கை:
இதற்குப் பதிலளித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஆசனூர், கேர்மங்கலம், தலமலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரக் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதிக மீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, “இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது முக்கியம். விதிகளை மீறி சட்டவிரோதமாகச் செயல்படும் ரிசார்ட்டுகள் எதுவாக இருந்தாலும், அவற்றுக்கு உடனடியாகச் சீல் வைக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும், இந்த நடவடிக்கைகள் குறித்த அடுத்தகட்ட அறிக்கைக்காக, வழக்கின் விசாரணையை இன்னும் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் சத்தியமங்கலம் மலைப் பகுதியில் உள்ள ரிசார்ட் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
