திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணியாறு – கொசஸ்தலை ஆறுகளை இணைப்பது, பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன் தெரிவித்ததாவது:
விளைநிலங்களை அபகரிக்கும் திட்டங்களை கைவிடுக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, அறிவுசார் நகரம் என்ற பெயரில் விளைநிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சி என்பது சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சீரான வளர்ச்சியாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர்கள் பலர் ஓய்வுக்குப் பின் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றச் செல்கின்றனர். அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் விவசாயிகள் அரசிலிருந்து பிரிக்கப்படும் சூழல் உருவாகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
வெளிமாநில நெல் ஊடுருவல் & நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழல்:
ஆந்திரா, தெலங்கானாவில் விளைவிக்கப்படும் நெல்லைச் சிலர் சுயநலத்திற்காகத் தமிழ்நாட்டின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வருகின்றனர். வெளிமாநில நெல்லை இங்கு அனுமதிக்கக் கூடாது; மீறுபவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை லஞ்சம் வாங்கப்படுவது உண்மை. விளைச்சல் வீணாகிவிடக் கூடாது என்பதால் விவசாயிகள் வேறு வழியின்றி லஞ்சம் கொடுக்கும் அவல நிலை உள்ளது.
மத்திய அரசுக்கு கோரிக்கைகள்:
வரவிருக்கும் எல்-நினோ தாக்கத்தால் தமிழ்நாடு கடும் வறட்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளதால், பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளைத் தூர்வார மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
விரைவில் சென்னையில் நடைபெறவுள்ள தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், காவிரி, முல்லைப்பெரியார், பாலாறு நதிநீர் பிரச்சினைகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மாநில முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்த வேண்டும்.
பரந்தூர் விமான நிலையப் பகுதியில் விவசாயிகள் ஒப்புதலுடன் 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுச் சிப்காட் அமைக்கப்பட்டால் அதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
காவல்துறையினர் தாக்கியதில் பூசாரி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு – பிணவறையில் நீதிபதி தீவிர விசாரணை!
