சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று (அக்டோபர் 2) காலை 10 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட திட்டம் நடைமுறைக்கு வருகிறது.


தற்போதைய திட்டம்
தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் ஏற்கனவே மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சி அமைந்தால் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
‘வெற்றிப் பயணம்’ திட்டம்
கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தற்போது செயல்பாட்டில் உள்ள மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தில் பயணிக்கும் பெண்களுக்கு வருமான உச்சவரம்பு அல்லது பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் படிப்படியாக இதர அரசு பேருந்து சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கும் இலவச பயணம்
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் திருநங்கைகளும் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு கணித்துள்ளது.
12,695 பேருந்துகள் திட்டத்தின் கீழ் வரும்
தற்போது பெண்கள் நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டர் வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரண அரசு பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் மொத்தம் 18,413 பேருந்துகளில் 12,695 பேருந்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 500 பேருந்து நடைகள் திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெற வாய்ப்பு
விரிவுபடுத்தப்பட்ட இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என அரசு கணித்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது
‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்கான மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களுடன் (இ.டி.எம்.) இணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த மாத இறுதியில் சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 27-ந்தேதி சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் கட்டணமில்லா அரசு பேருந்து பயணத் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
சி.விஜயபாஸ்கருக்கு எதிரான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு – உயர் நீதிமன்றம் நடவடிக்கை!
