மேகதாது விவகாரத்தில் சோனியா, ராகுலுக்கு முதலமைச்சர் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் – வலியுறுத்தல் – பெண் அரசு அதிகாரிக்கே பாலியல் சீண்டல்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில் அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் குமாரின் மணிமண்டபத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புதிய நீதிக் கட்சியின் செயல் தலைவர் ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துப் பேசினார். அப்போது, “நான் விஜய்யைப் போலச் செய்தியாளர்களைப் பார்த்து ஓடமாட்டேன். நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
திருச்செந்தூர் அரோகரா முழக்கம் குறித்து விமர்சனம்
திருச்செந்தூரில் முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அரோகரா என முழக்கமிட்டது குறித்துப் பேசிய ஜெயக்குமார், “முதலமைச்சருக்கு அரோகரா, அமைச்சருக்கு அரோகரா எனச் சொல்லிவிட்டார்கள். அதுதான் இந்த ஆட்சியின் இறுதிக்கான அரோகரா” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்
மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசிய அவர், முதலமைச்சர் டெல்லி சென்றபோது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்து இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்றார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால், அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு அவர்களிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும் எனக் கூறிய ஜெயக்குமார், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டக் கூடாது என்ற உச்சநீதிமன்ற விதிகளைச் சுட்டிக்காட்டினார். அரசியல் செய்வதற்காக கர்நாடகாவில் உள்ளவர்கள் வீண் குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய அவர், எந்தக் காலத்திலும் மேகதாது அணையைக் கட்ட அதிமுக அனுமதிக்காது என்றும், இத்திட்டத்தை அதிமுக முழுமையாக எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய ஜெயக்குமார், மாநிலத்தில் செயின் பறிப்பு, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, பாலியல் சீண்டல்கள், லாக்-அப் மரணங்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டினார்.
மாஜிஸ்திரேட் அதிகாரம் கொண்ட பெண் அரசு அதிகாரிக்குக்கூட பாலியல் சீண்டல் அளிக்கும் வகையில் நிலைமை மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த கவலையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும், மக்கள் யாருக்கு வாக்களித்தோம் எனத் தெரியாமல் அவதிப்படுவதாகவும், இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் காத்திருப்பதாகவும் ஜெயக்குமார் விமர்சித்தார்.
