Homeசெய்திகள்தமிழ்நாடுOBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – பிரதமருக்கு பி....

OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – பிரதமருக்கு பி. வில்சன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) இடஒதுக்கீட்டு உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கியத் தீர்ப்பை மத்திய அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – பிரதமருக்கு பி. வில்சன் வலியுறுத்தல்!

கடந்த 22 ஆண்டுகளாகத் தகுதியுடைய OBC இளைஞர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நிர்வாக நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1993ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய அரசின் அலுவலகக் குறிப்பாணையில் (Office Memorandum) OBC கிரீமிலேயர் தகுதியை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, வருமானம் மற்றும் சொத்து அடிப்படையிலான கணக்கீட்டில் பெற்றோரின் ஊதிய வருமானம் மற்றும் விவசாய வருமானம் சேர்க்கப்படக் கூடாது என்ற விதிமுறை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு விளக்கக் கடிதத்தால் ஏற்பட்ட சர்ச்சை

1993ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையின் அடிப்படையில், OBC கிரீமிலேயர் தகுதியை நிர்ணயிக்கும்போது பெற்றோரின் பதவி நிலை மற்றும் பணிப்பிரிவு உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பி. வில்சன் விளக்கியுள்ளார். அப்போது நடைமுறையில் இருந்த வருமான வரம்பு பின்னர் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.8 லட்சமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், 2004ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட விளக்கக் கடிதத்தின் மூலம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெற்றோரின் ஊதியத்தையும் கிரீமிலேயர் கணக்கீட்டில் சேர்க்கும் வகையிலான நடைமுறை உருவானதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் 1993ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையில் வகுக்கப்பட்ட அடிப்படை விதிமுறைகளுக்கு முரணான நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகத் தகுதியுடைய பல OBC விண்ணப்பதாரர்கள் இடஒதுக்கீட்டுப் பயன்களைப் பெறுவதில் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு

2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விளக்கக் கடிதத்தை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டதாகவும், தீர்ப்பாயம் அந்தக் கடிதத்தின் அடிப்படையிலான நடவடிக்கையை ரத்து செய்ததை உயர்நீதிமன்றமும் உறுதி செய்ததாகவும் பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், கடந்த மார்ச் 11ஆம் தேதி நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கியத் தீர்ப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தீர்ப்பில், OBC கிரீமிலேயர் தகுதியை நிர்ணயிக்கும்போது பெற்றோரின் ஊதிய வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது என்றும், பெற்றோரின் பணிப்பதவி மற்றும் சமூக அந்தஸ்து உள்ளிட்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2004ஆம் ஆண்டு விளக்கக் கடிதம் 1993ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையின் அடிப்படை விதிமுறைகளை மாற்றியமைக்கவோ, அதற்கு மேலாகச் செயல்படவோ முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் அவகாசம் கோரிய மத்திய அரசு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல் செய்ததாக பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதால் ஏற்கெனவே முடிவடைந்த தேர்வுகள், பணி நியமனங்கள் மற்றும் பதவி ஒதுக்கீடுகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் மத்திய அரசு கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கு எதிராகத் தாம் சில மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதிட்டதாகவும், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பைத் தாமதப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் கோரிக்கையை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை எட்டு வாரங்களாக நீட்டித்து உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில், மார்ச் 11ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்களின் உரிமைகளைத் தீர்மானிப்பதாகவும், ஏற்கெனவே முடிவடைந்த தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களைத் தானாகவே மீண்டும் திறக்க இந்தத் தீர்ப்பு அடிப்படையாக அமையாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கூடுதல் பணியிடங்களை உருவாக்கலாம்

தகுதியுடைய OBC விண்ணப்பதாரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உறுதிசெய்ய, தேவையான கூடுதல் பணியிடங்களை (Supernumerary Posts) உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் 1993ஆம் ஆண்டு மத்திய அரசின் சொந்த விதிமுறைகளுக்கு ஏற்ப பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தத் தீர்ப்பு சமூகநீதியை நிலைநாட்டுவதில் முக்கியமான மைல்கல் என்றும், அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள சமத்துவத்தையும் இடஒதுக்கீட்டு உரிமையையும் பாதுகாப்பதற்கான முக்கிய முன்னெடுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு வலியுறுத்தல் – இழந்த வாய்ப்புகளுக்கும் உரிய நடவடிக்கை தேவை

இந்தியப் பிரதமர் மற்றும் மத்திய பணியாளர் நலன் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி. வில்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தொடர்ந்து காலதாமதம் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த 22 ஆண்டுகளில் OBC இளைஞர்கள் இழந்த வேலைவாய்ப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உரிய முறையில் கணக்கீடு செய்து, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது அறிக்கையில் பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!

MUST READ