பரமசிவம் – சமீர் அகமது வழக்கில் புதிய திருப்பம்
இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு, அவர்களின் முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகச் சான்றிதழ் வழங்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2015-ல் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பரமசிவம்
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக்கொண்டார்.
இதையடுத்து, முஸ்லிம் லெப்பை சமூகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகச் சான்றிதழ் வழங்கக் கோரி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார்.
ஆனால், அவர் மதம் மாறியிருந்தாலும், முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் முஸ்லிம் லெப்பை சான்றிதழ் கோர முடியாது எனக் கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
இதனை எதிர்த்து சமீர் அகமது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், தனது முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகச் சான்றிதழ் கோர முடியாது எனத் தெரிவித்தது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த சிலர் இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஏழு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகங்களில் ஒன்றின் கீழ் சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசு 2024ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி வெளியிட்ட அரசாணையையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
அக்டோபர் 15ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், ஒருவர் இந்து மதத்திலிருந்து இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட இந்து அல்லாத மதங்களுக்கு மாறிய பிறகு, தனது முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுப் பலன்களைத் தானாகவே கோர முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
குறிப்பாக, இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுவதால் மட்டுமே ஒருவர் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏழு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவராகிவிட முடியாது என்றும், முந்தைய சமூக அடையாளத்தைப் புதிய மதத்தின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகப் பிரிவுக்கு தானாக மாற்றிக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதன் அடிப்படையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர்.
தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தற்போது சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் மதமாற்றம் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான சில சட்டப் பிரச்சினைகள் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் பரிசீலனையில் உள்ள நிலையில், அவை தொடர்பான விவாதங்கள் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில், தமிழக அரசின் சீராய்வு மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீராய்வு மனுவில் நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு, மதம் மாறியவர்களின் சமூகச் சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் அடுத்தகட்ட முக்கியத்துவம் பெறும் எனக் கருதப்படுகிறது.
