திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய ‘அரோகரா’ முழக்கத்தை முதலமைச்சர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோருக்காக எழுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான முருக பக்தர்களின் இறைநம்பிக்கையையும் உணர்வுகளையும் புண்படுத்தியவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு மரபின் அடையாளமாகவும், பண்பாட்டுப் பெருமையாகவும் முருகப்பெருமான் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். முருகப்பெருமானின் வீரத்தையும் வெற்றியையும் போற்றும் சூரசம்ஹார விழா, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழிபடும் புனிதமான நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தகைய விழாவில் முருகப்பெருமானுக்குப் பதிலாக முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் ‘அரோகரா’ முழக்கமிடுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், முருகப்பெருமானின் வீரத்தைப் போற்ற வேண்டிய இடத்தில் முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்திப் பாடல் பாடியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
தனிமனிதத் துதிபாடலுக்கு எதிராகக் கேள்வி
ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காகத் தமிழர்களின் தொன்மையான இறை வழிபாட்டு மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொச்சைப்படுத்தக் கூடாது என்று சீமான் தெரிவித்துள்ளார். பதவி மற்றும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களின் இறைநம்பிக்கையைப் பலிகொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதுபோன்ற செயல்களுக்கு வரம்பு இருக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், இந்தச் செயல் முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி நடைபெற்றதா அல்லது அவரைச் சுற்றியிருப்பவர்கள் அவரிடம் நற்பெயர் பெறுவதற்காகத் தன்னிச்சையாகச் செய்தார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சருக்குத் தெரியாமல் இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தால், அதைக் கண்டிக்காதது ஏன் என்றும், இறைநம்பிக்கையாளர்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பகிரங்க மன்னிப்புக் கோரிக்கை
மக்கள் வழங்கிய பதவி மக்களுக்குப் பணியாற்றுவதற்கானதே தவிர, மக்கள் வணங்கும் இறைவனுக்கு இணையாகத் தங்களை உயர்த்திக்கொள்வதற்கானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள சீமான், ஆட்சியும் அதிகாரமும் நிலையானவை அல்ல; ஆனால் முருகப்பெருமானின் பெருமையும் அவரை வழிபடும் மக்களின் நம்பிக்கையும் காலங்காலமாக நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் வழிபாட்டு மரபை மீறி முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்காக முழக்கமிட்டவர்களும், முருகப்பெருமானுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்திப் புகழ்பாடியவர்களும் முருக பக்தர்களான தமிழர்களிடம் உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரசு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் இத்தகைய சம்பவம் நடந்ததற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் விஜய் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனிவரும் காலங்களில் எந்தவொரு திருக்கோயில் நிகழ்விலும் அரசியல் தலைவர்களுக்கான தனிமனிதத் துதிபாடல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் தனது அறிக்கையில் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
