Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைக்க மருத்துவத்துறை நிதியா? – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைக்க மருத்துவத்துறை நிதியா? – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

-

- Advertisement -

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம், டாஸ்மாக் கிடங்குகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்வது, அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பது, இருப்பைக் கண்காணிப்பது, உரிய நேரத்தில் விநியோகம் செய்வது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பொறுப்புகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கிடங்குகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மருத்துவப் பணிகள் கழகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவப் பணிகள் கழகம் தற்போது டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை அமைப்பது, மழைநீர் கசிவைச் சரிசெய்வது போன்ற பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்திருப்பது, மக்கள் நலனைவிட டாஸ்மாக் விற்பனைக்கான கட்டமைப்பைப் பராமரிப்பதற்கே தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் கேள்விக்குறி!

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு, குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் குறைபாடு எனப் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன.

இத்தகைய சூழலில், அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் மருத்துவச் சேவைகளையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைப்பதில் அரசு அக்கறை காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டிய டாஸ்மாக்கின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் மருத்துவத்துறைக்குப் பொறுப்பு வகிக்கிறாரா அல்லது டாஸ்மாக் துறைக்குப் பொறுப்பு வகிக்கிறாரா என்ற கேள்வி எழுவதாகவும் விமர்சித்துள்ளார்.

மருத்துவப் பணிகள் கழகத்தின் அடிப்படை நோக்கம் சிதைக்கப்படக் கூடாது!

மருத்துவத்துறைக்கென உருவாக்கப்பட்ட மருத்துவப் பணிகள் கழகம் போன்ற நிறுவனங்களின் அடிப்படை நோக்கத்தைச் சிதைக்கும் வகையில், டாஸ்மாக் உள்ளிட்ட பிற துறைகள் சார்ந்த பணிகளை அவற்றின் மூலம் மேற்கொள்ளச் செய்யும் நடவடிக்கையைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மருத்துவப் பணிகள் கழகம் தனது அடிப்படைப் பொறுப்புகளான மருந்துக் கொள்முதல், தரப் பரிசோதனை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் முழுமையாகக் கவனம் செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மக்களே CLIMAX எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா?” – டிடிவி தினகரன் கேள்வி!

MUST READ