Homeசெய்திகள்தமிழ்நாடுடெங்கு பரவலைத் தடுக்க கொசுக்களைப் பிடித்து அரைத்துப் பரிசோதனை! – தமிழக சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கை!

டெங்கு பரவலைத் தடுக்க கொசுக்களைப் பிடித்து அரைத்துப் பரிசோதனை! – தமிழக சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கை!

-

- Advertisement -

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தவும், நோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொது சுகாதாரத்துறை புதிய அறிவியல் முறையைத் தீவிரப்படுத்தியுள்ளது.டெங்கு பரவலைத் தடுக்க கொசுக்களைப் பிடித்து அரைத்துப் பரிசோதனை! – தமிழக சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கை!

இதன் ஒரு பகுதியாக, வீடுகள் மற்றும் பொதுப் பகுதிகளில் கொசுக்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வகத்திற்குக் கொண்டு சென்று அரைத்துப் பரிசோதிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொசுக்களைச் சேகரிக்கும் களப்பணிக் குழுவினர்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் களப்பணியாளர்கள் மற்றும் பூச்சியியல் வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் வீடுகளுக்குச் சென்று கொசுக்களைச் சேகரித்து வருகின்றனர். இதற்காகக் குழாய்கள் (Tube) மற்றும் ஒளி உமிழும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு சேகரிக்கப்படும் கொசுக்களில், டெங்கு வைரஸைப் பரப்பக்கூடிய ஏடிஸ் (Aedes) வகைக் கொசுக்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொசுக்களை அரைத்து பிசிஆர் பரிசோதனை

ஆய்வகத்திற்குக் கொண்டுவரப்படும் கொசுக்கள், ‘டிஷ்யூ ஹோமோஜினைசர்’ (Tissue Homogenizer) என்ற நவீன இயந்திரத்தின் மூலம் அரைக்கப்பட்டு, நீர்மக் கரைசலாக மாற்றப்படுகின்றன.

பின்னர் அந்தக் கரைசல் ‘பேன் டெங்கு பிசிஆர்’ (Pan Dengue PCR) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் சேகரிக்கப்பட்ட கொசுக்களில் டெங்கு வைரஸ் கிருமி உள்ளதா என்பதை அறிவியல் பூர்வமாகக் கண்டறிய முடிகிறது.

முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம்

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் ஏ. சோமசுந்தரம் கூறுகையில், கடந்த 2016–17ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, கடந்த சில ஆண்டுகளாக மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஜூலை முதல் டிசம்பர் வரை டெங்கு பரவல் அதிகரிக்கும் காலமாகக் கருதப்படுவதால், அந்தக் காலகட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

பரிசோதனையில் டெங்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகள் ‘ஹாட்ஸ்பாட்’ (Hotspot) பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு, அங்கு முன்னெச்சரிக்கை மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் மூலம் மனிதர்களிடையே நோய்த்தொற்று அதிகரிப்பதற்கு முன்பே ஆபத்துள்ள பகுதிகளைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட முடியும் என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

இந்தியாவில் டெங்கு பரப்பும் கொசுக்களைச் சேகரித்து, அவற்றில் வைரஸ் பாதிப்பு உள்ளதா என ஆய்வகத்தில் பரிசோதித்து அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றும் ஒரே மாநிலம் தமிழகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொசுக்களின் மூலம் நோய் பரவல் ஏற்படுவதற்கு முன்பே அதைக் கண்காணிக்கும் இந்த நடவடிக்கை, டெங்கு தடுப்புப் பணிகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 2,500 மருத்துவப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை; வேலூரில் அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

MUST READ