பணப்பரிவர்த்தனை தளங்களைப் பயன்படுத்தி வரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைக் குறிவைத்து சைபர் குற்றக் கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.22 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரே மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை கணக்கில் ரூ.22 கோடி மோசடி
தமிழக ஊரக வளர்ச்சித் துறை தனியார் வங்கியில் வைத்திருந்த வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.22 கோடி சைபர் மோசடி கும்பலால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஊரக வளர்ச்சித் துறை பயன்படுத்தி வந்த பணப்பரிவர்த்தனை தளத்தைத் தனியார் நிறுவனம் உருவாக்கியிருந்ததும், அதன் மூலம் மூன்று மாவட்டங்களுக்கான நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்தத் தளத்தில் போலி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி ஹேக்கிங் செய்து பணம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோசடி செய்யப்பட்ட பணம் சென்ற மியூல் வங்கிக் கணக்குகளை வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஒரே மணி நேரத்தில் ரூ.1.03 கோடி மோசடி
இந்நிலையில், இதேபோன்ற முறையில் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரே மணி நேரத்தில் ரூ.1 கோடியே 3 லட்சத்து 76 ஆயிரத்து 860 மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், ‘Bulkpe’ என்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தளத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குநரான சத்ய நாராயணன் (29), இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், கடந்த நவம்பர் 9-ஆம் தேதி காலை 11.01 மணி முதல் 11.55 மணி வரை, நிறுவனத்தின் யெஸ் வங்கி (YES Bank) கணக்கில் இருந்து மர்ம நபர்கள் சட்டவிரோதமாக 24 முறை பணப்பரிவர்த்தனை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மொத்தம் ரூ.1,03,76,860 பணம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் சர்வரில் பதிவாகாத பரிவர்த்தனைகள்
நிறுவனம் பயன்படுத்தி வரும் யெஸ் வங்கியின் ஏபிஐ (API) பணப்பரிவர்த்தனை வசதியில், அங்கீகரிக்கப்பட்ட ஐபி முகவரி மற்றும் பாதுகாப்பு குறியாக்கச் சான்றிதழ் மூலமாக மட்டுமே பணம் அனுப்ப முடியும். ஆனால், நிறுவனத்தின் சர்வர் மற்றும் தரவுத்தளப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, மேற்கண்ட 24 பணப்பரிவர்த்தனைகளும் நிறுவனத்தின் கணினி அமைப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணம் பெற்றவர்களுக்கும் நிறுவனத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வாரந்தோறும் வங்கிக் கணக்கு விவரங்களையும் நிறுவனத்தின் பரிவர்த்தனைப் பதிவுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். அதன்படி, நவம்பர் 12-ஆம் தேதி மாலை கணக்குகளைச் சரிபார்த்தபோது, நிறுவனத்தின் பதிவுகளில் இடம்பெறாத 24 பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக யெஸ் வங்கிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மோசடியாகப் பணம் பெற்ற வங்கிக் கணக்குகளை முடக்கவும், பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான ஐபி முகவரிகள் மற்றும் தொழில்நுட்பப் பதிவுகளை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை ஏபிஐ வசதியையும் தற்காலிகமாக முடக்குமாறு வங்கியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பல மாநில வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட பணம்
மோசடி செய்யப்பட்ட பணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக IMPS, RTGS மற்றும் வங்கியின் நேரடி பணப்பரிமாற்ற வசதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஒரே வங்கிக் கணக்குகளுக்குப் பலமுறை பணம் அனுப்பப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த பெரும்பாலான பணமும் இந்தப் பரிவர்த்தனைகள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், நிறுவனத்தின் ஏபிஐ பாதுகாப்பு நடைமுறைகளை மீறி எவ்வாறு பணத்தைப் பரிமாற்றம் செய்தனர், மோசடியாகப் பெறப்பட்ட பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுத் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது தனியார் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனைத் தளத்தையும் குறிவைத்து சைபர் கும்பல் கைவரிசை காட்டியிருப்பது, இதுபோன்ற தளங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
