Homeசெய்திகள்தமிழ்நாடுவீரபெருமாள்புரம் கூட்டுறவு சங்கத்தில் 346 பவுன் நகை மாயம்:  துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள்...

வீரபெருமாள்புரம் கூட்டுறவு சங்கத்தில் 346 பவுன் நகை மாயம்:  துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்!

-

- Advertisement -

வீரபெருமாள்புரம் கூட்டுறவு சங்கத்தில் 346 பவுன் நகை மாயம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீரபெருமாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் அடகு வைத்த 346 பவுன் நகைகள் மாயமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தியும் நகைகள் திரும்பக் கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், திருமங்கலம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இரண்டாவது நாளாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

13 கிராம விவசாயிகள் பாதிப்பு & செயலாளர் தலைமறைவு:

வீரபெருமாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், வீரபெருமாள்புரம், தூம்பக்குளம், அரசபட்டி, கிருஷ்ணாபுரம், எஸ்.பி.நத்தம், சோழபுரம், டி.புதூர் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், ஆடு, மாடு மற்றும் பயிர்க் கடன்களுக்காகத் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளனர்.

  • 500 பவுனுக்கு மேல் அடகு: சுமார் 500 பவுனுக்கு மேல் நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில், கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கும் நகைகளைத் திருப்பித் தராமலும், பணம் செலுத்தியதற்கான ரசீதைக் கொடுக்காமலும் சங்கத்தின் செயலாளர் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  • 25 நாட்களாக நடவடிக்கை இல்லை: இது குறித்துக் கடந்த 25 நாட்களாகப் பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருமங்கலம் துணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூட்டுறவு நகைக்கடன்

346 பவுன் நகை மாயமானதை உறுதி செய்த துணைப் பதிவாளர்:

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் கண்ணம்மாள், 102 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த 346 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளதை உறுதிப்படுத்தியதுடன், இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குற்றவாளியை நெருங்கிவிட்டோம் – அதிகாரிகள் உறுதி:

இது குறித்துத் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சந்தானம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடனைத் திருப்பிச் செலுத்தியும் நகை மற்றும் ரசீது கிடைக்காமல் 13 கிராம மக்கள் 25 நாட்களாகப் பரிதவித்து வருகின்றனர். எங்களது முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர் மற்றும் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 346 பவுன் நகை மாயமானது குறித்து மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு 6 நாட்களாகிவிட்டது. குற்றவாளியை நெருங்கிவிட்டோம்; இன்னும் சில நாட்களில் பிடித்துவிடுவோம் என்றும், இருப்பில் உள்ள நகைகளை உடனடியாகவும், மாயமான நகைகளைச் சில வாரங்களுக்குள்ளும் உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.”

அதிகாரிகளின் இந்த உறுதிமொழியை ஏற்று முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதாகவும், உரிய காலத்திற்குள் நகைகள் திரும்பக் கிடைக்காவிட்டால் மீண்டும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

MUST READ