ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர் மற்றும் அவிநாசி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில், அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாகக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையேயும், தினசரிப் பயணிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாகத் தமிழக அரசின் சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த சில தினங்களாக இந்த புதிய கட்டண உயர்வை அதிரடியாக அமல்படுத்தி வசூலித்து வருகின்றனர். அண்மைக் காலமாக உயர்ந்து வரும் டீசல் விலையைக் காரணம்காட்டி, அவர்கள் இந்த தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, தனியார் பேருந்துகளில் ஈரோட்டில் இருந்து கோவைக்கு ஏற்கனவே இருந்த 64 ரூபாய் கட்டணம் தற்போது 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், ஈரோடு – அவிநாசி வழித்தடத்திற்கான கட்டணம் 40 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், ஈரோடு – பெருந்துறைக்கான கட்டணம் 13 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு – திருப்பூர் இடையேயான கட்டணம் 34 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக உயர்த்தப்பட்டு பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக, அரசுப் பேருந்துகளை விடத் தனியார் பேருந்துகளில் கட்டணம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, அரசு விரைவுப் பேருந்துகளில் (Express) ஈரோடு – கோவைக்கு 83 ரூபாயும், ‘ஈரோடு 100’ என்றழைக்கப்படும் விரைவுப் பேருந்துகளில் 95 ரூபாயும், குளிர்சாதன (A.C) பேருந்துகளில் 115 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், தனியார் பேருந்துகளின் இந்த திடீர் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தரப் பயணிகளுக்குக் கூடுதல் நிதிச் சுமையாக மாறியுள்ளது.
இது குறித்துப் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசின் அனுமதியின்றி தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாகப் பயணிகளிடமிருந்து தொடர் புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மூலம் உரிய ஆய்வு மேற்கொண்டு, தன்னிச்சையாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
