‘நீட் அநீதியை டிலீட் செய்வோம்’ — போராடும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறைக்குக் கடுமையான கண்டனம்!
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து, பிரபல இயக்குநர் ராஜு முருகன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரும் சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ் ஆகியோர் பங்கேற்ற கலந்தாய்வு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பது குறித்தும் இருவரும் காரசாரமாக உரையாற்றினர்.

“கல்வி பொதுச்சொத்து; மாணவர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள்!” — இயக்குநர் ராஜு முருகன்
நிகழ்வில் சிறப்புரையாற்றிய இயக்குநர் ராஜு முருகன், “கல்வி என்பது குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமேயானதாக மாறாமல், அது அனைவருக்கும் சமமான பொதுச்சொத்தாக மாற்றப்பட வேண்டும். தன் கல்வி உரிமைக்காக மாணவர்கள் இன்று வீதியில் இறங்கி முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
சமூக வலைத்தளங்களில் வெறும் ரீல்ஸ் மோகத்திலும், பொழுதுபோக்குகளிலும் மூழ்கியிருப்பதை விட, இதுபோன்ற உரிமைக் குரல்களுக்காக மாணவர்கள் ஒன்றிணைவதே இன்றைய காலகட்டத்தின் அவசியமான தேவையாகும். நீட் தேர்வை அகற்ற மாநில அரசும் அனைத்துத் தரப்பு அரசியல் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.
“நீட் எனும் அநீதியை டிலீட் செய்வோம்!” — திவ்யா சத்யராஜ் ஆவேசம்
மாணவர்களின் போராட்டத்திற்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்து உரையாற்றிய திவ்யா சத்யராஜ், “ஒரு ஜனநாயக நாட்டின் உண்மையான ஹீரோக்கள் மாணவர்கள்தான். தங்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் மீதும், மாற்றுத்திறனாளிகள் மீதும் காவல்துறையினரைக் கொண்டு அடக்குமுறையைக் கையாள்வதும், தாக்குதல் நடத்துவதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ‘நீட் என்னும் அநீதியை டிலீட் செய்வோம்’ என்ற ஒற்றை முழக்கத்தோடு மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தார்.
தேசிய அளவில் எதிரொலிக்கும் மாணவர் குரல்
கல்வி உரிமைக்காகவும், நீட் தேர்வு ரத்துக்காகவும் தமிழ்நாட்டில் தொடங்கும் மாணவர்களின் இந்தப் போராட்டம், இந்திய அளவில் பெரும் தாக்கத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக இந்நிகழ்வில் பேசிய அமைப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். மாணவர்களின் இந்த உறுதியான குரல் ஆட்சியாளர்களின் கதவைத் தட்டி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.
