இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 2027-ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை (ODI World Cup) அணியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் (IPL 2026) தொடரில் பெங்களூரு (RCB) அணி கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்காற்றிய புவனேஷ்வர் குமார், அத்தொடரில் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


புவனேஷ்வர் குமார் குறித்து அஸ்வின் கருத்து
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கான மாற்று வழிகளை பிசிசிஐ ஆராய்ந்து வரும் நிலையில், புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்ப்பது குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது: “புவனேஷ்வர் குமாருக்கு அணியில் கண்டிப்பாக இடம் அளிக்கலாம். நான் அவரைத் தொடர்புகொண்டு, முதல்தர கிரிக்கெட் மற்றும் விஜய் ஹசாரே கோப்பை உள்ளிட்ட அனைத்து உள்நாட்டுத் தொடர்களிலும் விளையாட வைக்க வேண்டும்.
அவரை முழுமையான உடற்தகுதியுடன் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குத் தயார்படுத்த வேண்டும். அங்கு நமக்கு அவரது அனுபவம் நிச்சயமாகத் தேவைப்படும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான பிளேயங் லெவன் கணிப்பு
இதனிடையே, இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலி (Galle) நகரில் தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மூன்று சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என்று அஸ்வின் யோசனை தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதார்த் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் பிளேயங் லெவனில் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தனது உத்தேச அணியின் வரிசையையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார்த் தனது முந்தைய போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறப்பாகச் செயல்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருந்த ரவீந்திர ஜடேஜா தற்போது முழுமையான உடற்தகுதியுடன் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளது அணிக்கு வலுசேர்க்கும் என்றும் அவர் கூறினார்.
சாய் சுதர்சனின் உடற்தகுதி முக்கியம்
இலங்கைச் சூழலில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது குறித்துப் பேசிய அஸ்வின், “இந்தியாவுக்கு இங்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய இழப்பு சாய் சுதர்சனின் உடற்தகுதியாக இருக்கக்கூடும். சமீபத்தில் இந்தியா ‘ஏ’ அணிக்காக அவர் காலி மைதானத்தில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார். அந்த மைதானத்தின் காற்று மற்றும் பந்து திரும்பும் கோணங்களை அவர் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். அவர் பிட் ஆக இருந்தால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக அமையும்; ஏனெனில் அவர் சுழற்பந்து வீச்சைத் திறம்பட எதிர்கொள்ளக் கூடியவர்” எனத் தெரிவித்துள்ளார்.
