நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா தொடர்பாக விவாதிக்க, சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் பங்கேற்காததால் இது பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


முக்கிய கட்சிகளின் புறக்கணிப்பு!
மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்களில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 20 உறுப்பினர்களில், 19 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”திசை திருப்பும் நாடகம்”: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
இந்தக் கூட்டம் குறித்து திமுக மற்றும் அதிமுக தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தற்போது தமிழகத்தில் பெரும் பேசுபொருளாக இருக்கும் ‘மேகதாது அணை’ விவகாரத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே முதல்வர் விஜய் இந்த நாடகத்தை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து, ஒருமித்த குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை!
மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் மக்கள் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பது கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கவலையாக இருந்தது. முன்னதாக, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதே விவகாரத்தில் பல மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்ததைச் சுட்டிக்காட்டிய பங்கேற்பாளர்கள், தற்போதைய சூழலில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக்கூட்டம் வெறும் பெயரளவில் மட்டுமே நடந்து முடிந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முதலமைச்சரின் இந்த முன்னெடுப்பு, தொகுதி மறுவரையறை சிக்கலுக்கு எந்த மாதிரியான தீர்வை எட்டும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
1 நாளுக்கு முன்னே சொல்லணும்! – நடிகர்கள், விஐபிக்கள் தரிசனத்திற்கு அமைச்சர் ரமேஷ் போட்ட புது ரூல்ஸ்!
