சீனாவில் விமானம் ஒன்று புறப்படத் தயாராக இருந்தபோது, அதன் மீது மின்னல் தாக்கியதால் பயணிகள் கடும் அச்சத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷென்சென் பாவோன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வூக்ஸி நகருக்குச் செல்வதற்காக, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சிஇ3209 (CE3209) என்ற விமானம் தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு முன்பே அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும், பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி விமானி விமானத்தை ஓடு பாதைக்குக் கொண்டு சென்றார்.

விமானம் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மிகப்பயங்கரமான இடி சத்தத்துடன் மின்னல் ஒன்று விமானத்தின் மீது தாக்கியது. திடீரெனக் கேட்ட இந்த இடி முழக்கத்தால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் நிலைகுலைந்து அச்சமடைந்தனர்.
பாதுகாப்பு ஆய்வு
இதனைத் தொடர்ந்து, தலைமை விமானி உடனடியாகப் பயணத்தை நிறுத்தினார். விமானத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், விமானத்தின் அடிப்பகுதியிலும் வால் பகுதியிலும் மின்னல் தாக்கியதற்கான 20-க்கும் மேற்பட்ட அடையாளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அந்த விமானம் மாற்றப்பட்டு, மாற்று விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சுமார் 3 முதல் 4 மணி நேரம் பயணம் தாமதமானது.
பாதிப்பு ஏன் ஏற்படவில்லை – இவ்வளவு பெரிய மின்னல் தாக்கியும், விமானத்திற்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படாதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கமளித்த தொழில்நுட்பக் குழுவினர், “விமானத்தின் வெளிப்புறம் அலுமினியம் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மின்னல் தாக்கும்போது பாயும் மின்சாரமானது விமானத்தின் வெளிப்புறப் பகுதி வழியாகவே வெளியேறிவிடும். எனவே, விமானத்தின் உட்பகுதிக்கு (கேபின்) எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மேலும், விமானத்தில் உள்ள முக்கிய மின்னணு சாதனங்கள் அனைத்தும் மின்னல் பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
