நடிகை தபுவின் பெயர், உருவம், குரல் மற்றும் பிற ஆளுமை உரிமைகளை (Personality Rights) அனுமதியின்றிப் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


தற்போது ஏ.ஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் மூலம் பிரபலங்களின் உருவத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி போலி வீடியோக்கள் உருவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராகத் தங்களுடைய ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி, பல திரை பிரபலங்கள் வழக்குத் தொடுத்து தடை உத்தரவைப் பெற்று வருகின்றனர்.
அந்த வரிசையில், நடிகை தபுவும் தனது பெயர், புகைப்படம் மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடு விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில் நடிகை தபு குறிப்பிட்டவை:
ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பிற முறைகேடான டிஜிட்டல் உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனது தனிப்பட்ட ஆளுமை உரிமையைப் பாதுகாக்க நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
150-க்கும் மேற்பட்ட லிங்குகளை நீக்க உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நடிகை தபுவைப் பற்றிய அனுமதிக்கப்படாத மற்றும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களைக் கொண்டதாகக் கூறப்படும் சுமார் 150-க்கும் மேற்பட்ட இணைய முகவரிகளை (URLs) உடனடியாக நீக்கக் கோரி கூகுள் (Google), மெட்டா (Meta), எக்ஸ் (X) மற்றும் ரெடிட் (Reddit) ஆகிய முன்னணி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
