சர்வதேச டி20 லீக் (ILT20) கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசனுக்காகத் தயாராகி வரும் ‘கல்ப் ஜெயன்ட்ஸ்’ (Gulf Giants) அணி, ஏலத்திற்கு முன்பான தங்களது முக்கிய வீரர்களின் ஒப்பந்தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அணியின் தலைமைப் பயிற்சியாளர் சைமன் ஹெல்மாட் (Simon Helmot), புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர்கள் அனைவரும் உலகத் தரம் வாய்ந்தவர்கள் என்றும், போட்டியை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


தென்னாப்பிரிக்காவின் அதிரடி ஜாம்பவான்கள் வருகை
கல்ப் ஜெயன்ட்ஸ் அணி தனது பலத்தை அதிகரிக்கும் வகையில் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரா்களான டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரைத் தங்களது அணியில் இணைத்துள்ளது. டி20 கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவரான டேவிட் மில்லர், இதுவரை 571 டி20 போட்டிகளில் விளையாடி 12,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். குறிப்பாக, 2022-ல் குஜராத் டைடன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல இவரது பங்கு மிக முக்கியமானது.
இவருடன் இணைந்துள்ள அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்டரான ஹென்ரிச் கிளாசென், 294 டி20 போட்டிகளில் 6,900 ரன்களுக்கு மேல் குவித்து மிரட்டலான பார்மில் உள்ளார். இந்த சீசன் மூலம் அவர் முதல் முறையாக டிபி வேர்ல்ட் ஐஎல்டி20 (DP World ILT20) தொடரில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் நட்சத்திரங்களின் பலம்
புதிய வீரர்களின் வருகையுடன், கடந்த தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களை அணியே தக்கவைத்துள்ளதும் (Retain) கல்ப் ஜெயன்ட்ஸ் அணிக்குப் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஒமர்சாய், கடந்த சீசனில் 10 போட்டிகளில் 233 ரன்களும், 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்குத் திரும்பியுள்ளார். ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளரான ப்ளெசிங் முராபனி, காயத்தால் கடந்த சீசனைத் தவறவிட்ட நிலையில் மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். முன்னதாக 2023-2024 காலக்கட்டங்களில் அணியின் வெற்றிகளில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
பயிற்சியாளர் சைமன் ஹெல்மாட் பெருமிதம்
இந்த பலமான அணி அமைப்பு குறித்துப் பேசிய தலைமைப் பயிற்சியாளர் சைமன் ஹெல்மாட், “டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசெனை கல்ப் ஜெயன்ட்ஸ் குடும்பத்திற்கு வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதேபோல் அஸ்மத்துல்லா மற்றும் ப்ளெசிங் ஆகியோரையும் மீண்டும் அணியில் தக்கவைத்துள்ளோம். இவர்கள் அனைவரும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய ‘மேட்ச் வின்னிங்’ திறமை கொண்டவர்கள். எங்களது அணியின் ஆழத்தை இது மேலும் அதிகரிக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐஎல்டி20 சீசன் 5 வீரர்களின் ஏலத்திற்கு முன்னதாக, கல்ப் ஜெயன்ட்ஸ் அணி தங்களது பலமான அடித்தளத்தை அமைத்துள்ளது. தொடக்கப் பதிப்பான 2023-ல் கோப்பையைக் கைப்பற்றிய இந்த அணி, தற்போது இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் தீவிரத் தயார்ப்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. வரும் நவம்பர் 22 முதல் டிசம்பர் 20 வரை இந்தத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் விலகிய சாய் சுதர்சனுக்கு பதிலாக அணியில் இணைந்தார் சர்ஃபராஸ் கான்!
