2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ (Viksit Bharat) என்ற இலக்கை எட்டுவதற்கு ஏற்ப வங்கிகளின் செயல்பாடுகளை வலுப்படுத்த, வங்கியியல் சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் மாநாட்டில் (PSB Conclave 2026) அவர் இதனைத் தெரிவித்தார்.


வங்கித்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள்:
இந்த மாநாட்டில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடுத்தகட்ட சீர்திருத்தங்களுக்கும் தேவையான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை உயர்மட்டக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு வங்கித்துறைத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் வங்கி வல்லுநர்கள் வழங்கும் முக்கியப் பரிந்துரைகள், அமைக்கப்படவுள்ள உயர்மட்டக் குழுவின் பரிசீலனைக்குக் கொண்டு செல்லப்படும்.
வரலாற்றுச் சாதனை அளவில் குறைந்த வராக்கடன்:
இந்திய வங்கிகளின் வாராக்கடன் (NPAs) இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர், வங்கிகளின் நிதி நிலைமை தற்போது மிகவும் வலுவாக உள்ளது என்று குறிப்பிட்டார். இந்த ஆரோக்கியமான சூழல், மேலும் பல புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் பெரும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நிதிச் சேவைகள் துறையின் 7 முக்கிய தலைப்புகள்:
வங்கியியல் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல நிதிச் சேவைகள் துறை (DFS) தயாரித்துள்ள 7 முக்கிய ஆய்வுத் தலைப்புகளை அமைச்சர் பட்டியலிட்டார்:
- இளைஞர்களுக்கான வங்கியியல் சேவைகள் (Banking for Youth)
- முதலீட்டு சுழற்சிக்கு ஆதரவளித்தல் (Supporting Investment Cycle)
- உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres)
- வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உள்கட்டமைப்பு
- முன்னுரிமை துறைக்கான கடன் உதவிகள் (Priority Sector Lending)
- கிரெடிட் கார்டு வர்த்தகத்தை மறுவடிவமைப்பு செய்தல்
குறிப்பாக, இந்தியாவின் மக்கள் தொகையில் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 29 சதவீதம் பேராக இருப்பதால், வங்கிகள் தங்களின் எதிர்கால திட்டமிடுதலில் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
