புதுடெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று (அக்டோபர் 2) நடைபெற உள்ள போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் 11 நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.


11 மெட்ரோ நிலையங்களில் கட்டுப்பாடு
ஜந்தர் மந்தர் போராட்டத்தை முன்னிட்டு கீழ்க்கண்ட 11 மெட்ரோ நிலையங்களில் பயணிகள் நுழைவதும், வெளியேறுவதும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
• ஜனபத்
• படேல் சவுக்
• சென்ட்ரல் செக்ரட்டேரியட்
• ராஜீவ் சவுக்
• சேவா தீர்த்
• மண்டி ஹவுஸ்
• லோக் கல்யாண் மார்க்
• ஐ.என்.ஏ.
• சாவ்ரி பஜார்
• ராமகிருஷ்ண ஆசிரம மார்க்
• நியூ டெல்லி
எனினும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ், நியூ டெல்லி மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் ஆகிய நிலையங்களில் மெட்ரோ வழித்தடங்களை மாற்றிப் பயணிக்கும் (Interchange) வசதி தொடர்ந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தரில் போராட்டம்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பாக எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் 3,000 முதல் 4,000 பேர் வரை பங்கேற்கலாம் என போலீசார் எதிர்பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கட்டுப்பாடுகள் அமல்
பாதுகாப்பு காரணங்களுக்காக புதுடெல்லி மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் தடையுத்தரவு அமலில் இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுதல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், தர்ணா, கோஷம் எழுப்புதல் உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்திலும் மாற்றம்
ஜந்தர் மந்தர், பாராளுமன்ற வீதி, அசோகா சாலை, டோல்ஸ்டாய் மார்க், படேல் சவுக் மற்றும் கனாட் பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப்பாதை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை முடிந்தவரை தவிர்த்து, மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெல்லி போலீசாருடன் மத்திய ஆயுதப்படை போலீஸ் (CAPF) வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Form 6-ல் மாற்றம் செய்தது யார்? TCS-க்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதா? – ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
