Homeசெய்திகள்இந்தியாபீகாரில் மதுபாட்டில்களுடன் மினி லாரி விபத்து – போட்டிப்போட்டு பாட்டில்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

பீகாரில் மதுபாட்டில்களுடன் மினி லாரி விபத்து – போட்டிப்போட்டு பாட்டில்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

-

- Advertisement -

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, அங்கு திரண்ட பொதுமக்கள் மதுபாட்டில்களை போட்டிப்போட்டு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ராணிகஞ்ச் பகுதியில் உள்ள கித்வாஸ் சுங்கச்சாவடி அருகே நடைபெற்றுள்ளது.

we-r-hiring

வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு வந்ததாக கூறப்படும் மினி லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பயணிகள் நிழற்குடை மற்றும் சுங்கச்சாவடி தடுப்பில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குப் பிறகு லாரியின் ஓட்டுநரும் கிளீனரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் லாரியில் இருந்த மதுபாட்டில்களில் சில சாலையில் சிதறிய நிலையில், அந்த வாகனத்தில் மதுபாட்டில்கள் இருப்பதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் பாட்டில்களை எடுத்துச் சென்றதாகவும், சிலர் முழு பெட்டிகளையும் எடுத்துச் சென்றதாகவும் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசார் வருவதற்குள் லாரியில் இருந்த மதுபாட்டில்களில் பெரும்பாலானவை எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மதுபாட்டில்களை எடுத்துச் சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் மூலம் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பீகாரில் 2016-ம் ஆண்டு முதல் மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல் மற்றும் அருந்துதல் ஆகியவற்றுக்கு தடை அமலில் உள்ளது. இந்நிலையில், மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் இருந்து பொதுமக்கள் மதுபாட்டில்களை எடுத்துச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான மினி லாரியை போலீசார் கைப்பற்றி, அதன் உரிமையாளர் மற்றும் மதுபானம் கொண்டு செல்லப்பட்ட வழித்தடம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபானம் அசாம் அல்லது மேற்கு வங்காளத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் அக்டோபர் 10-ல் டெல்லியில் போராட்டம் – அபிஜித் தீப்கே அறிவிப்பு!

MUST READ