இந்தியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜெர்மனியைச் சேர்ந்த ‘டேசன் குரூப் மரைன் சிஸ்டம்’ (ThyssenKrupp Marine Systems) நிறுவனத்துடன் கைகோர்த்து, மிகவும் சக்திவாய்ந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படையின் வலிமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நீண்டகாலத் திட்டம்: கார்கில் போருக்குப் பிறகு, இந்தியக் கடற்படையைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த பாதுகாப்புத் துறை, கடந்த 1999-ஆம் ஆண்டிலேயே ‘ப்ராஜெக்ட் 75’ (Project 75) என்ற திட்டத்தைத் தொடங்கியது. நிதி ஒதுக்கீடு, தொழில்நுட்பக் கோரிக்கைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகப் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்தத் திட்டம், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
புதிய நீர்மூழ்கிக் கப்பலின் சிறப்பம்சங்கள்: இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பல தனித்துவமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன:
ஏர் இன்டிபெண்டன்ட் ப்ரோபல்ஷன் (AIP): இதில் உள்ள அதிநவீன ஏஐபி தொழில்நுட்பத்தால், நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி நீர்மட்டத்திற்கு வராமல், இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆழ்கடலிலேயே ரகசியமாகப் பயணம் செய்யும் திறன் பெற்றுள்ளன. சாதாரண டீசல்-எலக்ட்ரிக் கப்பல்கள் 48 மணி நேரத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்ய மேலே வர வேண்டியது கட்டாயம் என்பதால், இது மிகப்பெரிய மாற்றமாகும்.
குறைந்த சத்தம் (Stealth): கப்பல்கள் இயங்கும்போது மிகக்குறைந்த சத்தமே எழுப்புவதால், எதிரிகளின் சோனார் கருவிகளால் கூட இதனைக் கண்டறிய முடியாது.
ஆழ்கடல் தாங்கும் திறன்: மேம்படுத்தப்பட்ட ‘பிரஷர் ஹல்’ (Pressure Hull) கட்டமைப்பு இருப்பதால், கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் ஆழம் வரை இதைப் பாதுகாப்பாக இயக்க முடியும்.
தாக்குதல் திறன்: இதில் 533 மி.மீ அளவிலான டார்பிடோ குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதால், சக்திவாய்ந்த ஏவுகணைகளை இலக்குகள் மீது துல்லியமாக ஏவ முடியும்.
நீண்ட கால பயணம்: எந்தவித வெளி உதவியும் இன்றி, உணவு மற்றும் எரிபொருள் வசதியுடன் தொடர்ச்சியாக 84 நாட்கள் வரை இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலில் நிலைத்திருக்க முடியும்.
இந்தக் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் இணையும் போது, இந்திய எல்லையை எதிரிகள் நெருங்குவதே சாத்தியமற்றதாகிவிடும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியக் கடற்படையின் இந்த புதிய ‘அசுரன்’, நாட்டின் கடல் எல்லைப் பாதுகாப்பிற்கு ஒரு கேடயமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
60 நாள் கெடு இனி செல்லாது: அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டது – ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு!
