Homeசெய்திகள்இந்தியாபேய் பீதியால் அரசு விடுதியை காலி செய்து ஓடிய 600 மாணவர்கள்!

பேய் பீதியால் அரசு விடுதியை காலி செய்து ஓடிய 600 மாணவர்கள்!

-

- Advertisement -

சிகல்தாரா: அரசு விடுதியில் பேய் உலாவுவதாக எழுந்த வதந்தியால் ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

we-r-hiring

நள்ளிரவில் கொலுசு சத்தம்

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தின் மேல்காட் மலைப்பகுதியில் உள்ள சிகல்தாராவில் டோமா அரசு பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த மாதம் 22-ந்தேதி முதல், இந்த விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகள் தங்களுக்கு நள்ளிரவில் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாக பயத்துடன் காப்பாளரிடம் கூறினர். குறிப்பாக, நள்ளிரவு வேளையில் யாரோ கொலுசு அணிந்து நடப்பது போன்ற சத்தமும், விசித்திரமான முனங்கல்களும் கேட்பதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் சில மாணவிகள் விசித்திரமாக நடந்து கொள்ள தொடங்கினர். சிலர் திடீரென மயங்கி விழுந்தும், சிலர் அழுதுகொண்டே ஆக்ரோஷமாக பயங்கர சத்தத்துடன் சிரிக்கும் விசித்திரமான அறிகுறிகளை வெளிப்படுத்தினர். இதனை நேரில் பார்த்த மற்ற மாணவர்களுக்கும், கிராம மக்களுக்கும் விடுதிக்குள் அமானுஷ்ய சக்தி அல்லது பேய் புகுந்துவிட்டதாக கூறிய வதந்தி காட்டுத்தீயாக பரவியது. எஸ்டேட் பகுதியில் உள்ள மரத்தை வெட்டியதால் தான் பேய் கோபமடைந்துவிட்டது என உள்ளூர் மக்களும் தங்களுக்குள் திகில் கதைகளை கிளப்பினர்.

ஒரே நாளில் காலியான விடுதி

பயம் உச்சக்கட்டத்தை எட்டியதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பற்ற சூழல் என நினைத்து அவசரமாக அழைத்துச்சென்றனர். 345 மாணவிகள், 263 மாணவர்கள் என மொத்தம் 608 பேர் தங்களது உடைமைகளை தூக்கிக்கொண்டு இரவோடு இரவாக விடுதியை விட்டு வெளியேறி தங்களது சொந்த ஊர்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.

600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே நாளில் மாயமாய் மறைந்து விடுதியே வெறிச்சோடியது மாவட்ட அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனநல நிபுணர்கள் விளக்கம்

இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து மாவட்ட அரசு பொது மருத்துவமனையின் மனநல மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாக அந்தப்பள்ளிக்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகளை தீவிரமாக பரிசோதித்த டாக்டர்கள், அங்கு எந்தவொரு அமானுஷ்ய சக்தியோ அல்லது பேயோ இல்லை என்பதை திட்டவட்டமாக கூறினர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், “மாணவிகளுக்கு ஏற்பட்டது பேய் பிடிப்பு அல்ல; இது கடுமையான மனஅழுத்தம் மற்றும் பயத்தினால் உண்டாகும் ‘மாஸ் ஹிஸ்டீரியா’ (கூட்டு மனப்பிராந்தி) என்ற தற்காலிக மனநல பாதிப்பாகும். ஒருவர் பயப்படுவதை பார்த்து மற்றவர்களும் அதேபோல் கற்பனை செய்துகொண்டு பயப்படும் ஒரு மனநிலை இது” என்று அறிவியல் பூர்வமாக விளக்கினர். இதனையடுத்து தற்போது சில மாணவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

அரசுப் பள்ளி மதிய உணவில் உப்புக்கு பதிலாக சலவைப் பவுடர்: 34 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு!

MUST READ