ஈரானுடன் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எந்த வகையிலாவது ஆதரவளிக்கும் நாடுகள் கடும் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.


மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தின் உச்சகட்டமாக, ஈரானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் வகையில் டிரம்ப் விடுத்துள்ள இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன் எப்போதும் இல்லாத பொருளாதாரத் தடைகள்: தனது ‘ட்ரூத் சோசியல்’ தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளத் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த அந்த நாடு தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட ராணுவ வலிமை: இந்த நடவடிக்கை ஒரு பொருளாதாரப் பேரழிவாக அமையும் என்று எச்சரித்துள்ள அவர், ஈரானின் கடற்படை செயலிழந்துவிட்டதாகவும், விமானப்படை மற்றும் ராணுவத் தொழிற்சாலைகள் முடக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி: ஈரானின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்த நாடு தற்போது வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக டிரம்ப் சாடியுள்ளார்.
உலக நாடுகளுக்கு ‘கடுமையான’ எச்சரிக்கை: ஈரானுக்கு உதவும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பியுள்ளது. நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் மற்றும் அரசு அமைப்புகள் என எந்தவொரு தளத்திலிருந்தும் ஈரானுக்கு உதவிகள் வழங்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பின்வரும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது:
எண்ணெய் கடத்தல் மற்றும் நாணயப் பரிமாற்றங்கள்.
பணப் பரிமாற்ற ஏற்பாடுகள்.
கப்பல் பதிவு சேவைகள் மற்றும் பினாமி நிறுவனங்களின் செயல்பாடுகள்.
அமெரிக்காவின் இலக்கு: உலகெங்கும் பயங்கரவாதத்தைப் பரப்பும் ஈரானின் திறனை அழிக்கவும், அந்த நாடு ஒருபோதும் அணு ஆயுதம் பெறாமல் இருப்பதை உறுதி செய்யவும் அமெரிக்கா உறுதியாக உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கின் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் அதிகாரப் போட்டியால் ஏற்கனவே பதற்றம் நீடித்து வரும் சூழலில், டிரம்பின் இந்த அறிவிப்பு இப்பிராந்தியத்தில் புதிய போர் மேகங்களை உருவாக்கியுள்ளது.
