வடகொரியாவிடம் தற்போது 80 முதல் 120 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று தென் கொரியா வெளியிட்டுள்ள புதிய தகவல் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தென் கொரியாவின் தகவல்: தென் கொரிய நாடாளுமன்றப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆன்கியூ-பெக் (Ahn Gyu-baek), வடகொரியாவின் அணு ஆயுத பலம் குறித்து முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
ஆய்வு நிறுவன மதிப்பீடு: வடகொரியாவிடம் 80 முதல் 120 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும், துல்லியமான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினம் என்பதால் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் பெறப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அங்கீகாரம் மறுப்பு: அதேவேளையில், வடகொரியாவை ஒரு அணு ஆயுத நாடாகத் தென் கொரியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
டிரம்பின் முரண்பட்ட கருத்து: இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரியாவின் அணு ஆயுதங்கள் குறித்துத் தெரிவித்த கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், வடகொரியாவிடம் 57 அணு ஆயுதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் எதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கையைக் கூறினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதே நேரத்தில், வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னுடனான தனது சந்திப்பு மற்றும் தொடர்பு குறித்து டிரம்ப் பேசியது சியோல் வட்டாரத்தில் விவாதங்களை அதிகரித்துள்ளது.
கூட்டணியில் விரிசலா? கடந்த 73 ஆண்டுகளாகத் தொடரும் அமெரிக்கா – தென் கொரியா இடையிலான ராணுவக் கூட்டணியில், தற்போது சில மாற்றங்கள் தென்படுகின்றன.
வடகொரியாவை எதிரியாகக் கருதும் தென் கொரியாவின் நிலைக்கு மாறாக, அமெரிக்கா வடகொரியாவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க விரும்புவதும், கூட்டு ராணுவப் பயிற்சிகளின் கால அளவைக் குறைக்க டிரம்ப் உத்தரவிட்டிருப்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
முந்தைய மதிப்பீடுகளைத் தாண்டிய எண்ணிக்கை: ஏற்கனவே வடகொரியாவிடம் 2,000 கிலோ யுரேனியம் இருப்பதாகவும், அதைக் கொண்டு சுமார் 50 அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும் என்றும் தென் கொரியா முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால், தற்போது அந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமான அணு ஆயுதங்கள் வடகொரியாவிடம் இருப்பதாகத் தென் கொரியா சுட்டிக்காட்டியிருப்பது, அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலையை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ஈரான் மீது அதிரடி பொருளாதாரப் போர்: உலக நாடுகளை எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!
