மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற MT LOUISE 1 என்ற அந்தக் கப்பலில் 27 இந்திய மாலுமிகள் இருந்தனர். தாக்குதலில் கப்பலின் என்ஜின் அறையில் தீப்பற்றிய நிலையில், அதிலிருந்த இந்தியர்கள் உட்பட அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கப்பலின் அடிப்பகுதியில் ஒட்டப்பட்ட வெடிகுண்டுகள்!
கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஹார்முஸ் நீரிணை வழியாக MT LOUISE 1 கப்பல் சென்று கொண்டிருந்தபோது, சிறிய படகு ஒன்று அதன் அருகே வந்ததாகக் கூறப்படுகிறது. அதிலிருந்தவர்கள் கப்பலின் வெளிப்புறப் பகுதியில் இரண்டு காந்த வெடிகுண்டுகளைப் பொருத்திவிட்டுச் சென்றதாகக் கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து ஏற்பட்ட வெடிப்பால் கப்பலின் என்ஜின் அறையில் தீப்பற்றியது. இதனால் கப்பல் தற்காலிகமாகச் செயலிழந்தது. பின்னர் கப்பலில் இருந்த மாலுமிகள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பல் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்!
இந்தத் தாக்குதல் குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வெளியிட்ட தகவலில், MT LOUISE 1 கப்பலில் இருந்த 27 இந்திய மாலுமிகளும் காயமின்றிப் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், கப்பல் நிர்வாக நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கப்பல் மீதும் தாக்குதல்!
இதற்கு முந்தைய நாளான அக்டோபர் 29-ம் தேதி, லைபீரியா நாட்டுக் கொடியுடன் சென்ற MT ARZANAH என்ற மிகப்பெரிய கச்சா எண்ணெய்க் கப்பல் மீதும் ஏவுகணை அல்லது வேறு வகையான எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் இரண்டு இந்தியர்கள் இருந்தனர். அவர்களும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இரண்டு கப்பல்களில் பயணித்த மொத்தம் 29 இந்தியர்களும் காயமின்றி உள்ளனர்.
ஹார்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் ஆபத்து!
ஓமன் நாட்டின் கசாப் (Khasab) பகுதியில் இருந்து சுமார் 46 கி.மீ. வடகிழக்கில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகப் பிரிட்டன் கடற்படையின் UKMTO அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்கா – ஈரான் போர் தொடங்கிய பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணையில் காந்த வெடிகுண்டுகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கலாம் என்று கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
