பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து, உலகின் முன்னணி 22 சர்வதேச முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃபுக்கு மீண்டும் ஒரு முறை கடிதம் எழுதியுள்ளனர்.


உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டு:
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்றவும், அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் மற்றும் அவரது சகோதரி டாக்டர் உஸ்மா கான் அடங்கிய மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது. மேலும், அவரது குடும்பத்தினர் வாரம் ஒருமுறை அவரைச் சந்திக்கவும் அனுமதி அளித்தது.
ஆனால், இந்த உத்தரவு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என முன்னாள் கேப்டன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இம்ரான் கான் சில மணிநேரங்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவக் குழுவிற்குப் பதிலாக, அரசு நியமித்த மருத்துவர்கள் குழு அவரைப் பரிசோதித்து “உடல்நலத்துடன் இருக்கிறார்” என அறிவித்து மீண்டும் அடியாலா சிறைக்கு அனுப்பியதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடிதத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள்:
சுதந்திரமான மருத்துவப் பரிசோதனை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு, குறிப்பாக அவரது வலது கண் பார்வை இழப்பு தொடர்பாக முழுமையான பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
குடும்பச் சந்திப்புகள்: வாராந்திர குடும்பச் சந்திப்புகள் எந்தவித தடங்கலோ அல்லது நிர்வாகத் தாமதமோ இன்றி தொடர வேண்டும்.
உடனடி சிகிச்சை: பரிசோதனைக்குப் பிறகு பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்பட வேண்டும்.
கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள பிரபலங்கள்:
இந்தியாவின் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார் உட்பட கபில் தேவ், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ஆடம் கில்கிறிஸ்ட், அலாஸ்டர் குக், மைக்கேல் ஆதர்டன், கிளைவ் லாயிட், அர்ஜுனா ரணதுங்கா, ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், நேசர் ஹுசைன் உள்ளிட்ட 22 சர்வதேச முன்னாள் கேப்டன்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
“நாங்கள் அரசியல்வாதிகளாக இந்த கடிதத்தை எழுதவில்லை. கிரிக்கெட் மைதானத்தில் ஒன்றாகப் பயணித்த சக வீரர்களாகவும், போட்டியாளர்களாகவும் மட்டுமே இந்த வேண்டுகோளை விடுக்கிறோம். பாகிஸ்தானின் உள்நாட்டு சட்ட விவகாரங்களில் தலையிடுவது எங்கள் நோக்கமல்ல,” என்று அவர்கள் தங்களது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதமும் 14 முன்னாள் கேப்டன்கள் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. சிறையில் போதிய மருத்துவ உதவி கிடைக்காததால் இம்ரான் கானுக்கு ஒரு கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: 75 நாடுகளின் விசா இடைநிறுத்த உத்தரவு ரத்து!
